அசாம் வெள்ளப்பெருக்கில் சிக்கி அறுவர் உயிரிழப்பு

0
128

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி அறுவர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த வெள்ளப்பெருக்கினால் சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்பாரி, கோல்பரா, நாகோன், ஹோஜாய், மேற்கு கார்பி அங்லாங் மற்றும் டின்சுகியா ஆகிய 6 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், கம்பூரில் பாயும் கோபிலி நதியில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி செல்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.