ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் லண்டன் திரும்பியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா வீரர்கள் மாலத்தீவு அல்லது இலங்கை மூலமாக தங்கள் நாட்டிற்கு செல்ல காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 8 வீரர்கள் தங்கள் நாட்டிற்கு அகமதாபாத்தில் இருந்து டெல்லி விரைந்து அங்கிருந்து விமானம் மூலம் லண்டன் சென்றுள்ளனர் . இதில் ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, ஜேசன் ராய், சாம் கரண் மற்றும் டாம் கரண் ஆகியோரும் லண்டன் சென்றனர்.

இந்நிலையில் அங்கு சென்றடைந்த பின் இவர்கள் அரசாங்க விதிகளின்படி அரசு அனுமதித்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மார்கன், தாவித் மாலன் மற்றும் ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜார்டன் ஆகியோர் இன்னும் சில மணி நேரத்தில் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் 38 பேர் நாடு திரும்புவதற்கு குறைந்தபட்சமாக மே 15ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து மீண்டும் நாட்டுக்கு அழைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் இவர்கள் மாலத்தீவு அல்லது இலங்கை வழியாக மீண்டும் ஆஸ்திரேலியா செல்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. .