அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் வேண்டிய சமயத்தில் இந்தியாவுக்கு உதவ உறுதியுடன் இருப்பதாக உறுதியளித்த கமலா ஹாரிஸ், இக்கட்டான இந்த நேரத்தில் இந்தியாவிற்கு உதவுவதற்காக அமெரிக்காவின் முழு அரசாங்க இயந்திரங்களும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் கருத்துரைத்த அவர்,இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எழுச்சி இதயத்தைத் துளைக்கும் செயலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று விவரித்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவின் நலன் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் தினசரி 4,00,000’க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ள நிலையில், தொற்றுநோயின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வருகின்றது. மேலும் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறையின் கீழ் மருத்துவமனைகள் திணறுகின்றன.

“தொற்றுநோயின் ஆரம்பத்தில், அமெரிக்காவில் மருத்துவமனைகள் படுக்கைகள் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, இந்தியா உதவி அனுப்பியது. இன்று, இந்தியாவுக்கு அதன் தேவை இருக்கும் நேரத்தில் உதவ நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று கமலா ஹாரிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இதை இந்தியாவின் நண்பர்களாகவும், ஆசிய குவாட் உறுப்பினர்களாகவும், உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாகவும் செய்கிறோம். நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டால் நாடுகள் மற்றும் துறைகளில் நாம் அனைவரும் நன்மைகளை பெறுவோம்.” என்று கமலா ஹாரிஸ் கூறினார்.

கொரோனா தொற்றுநோயைச் சமாளிக்க பிடென்-ஹாரிஸ் நிர்வாகம் இந்தியாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியை அறிவித்துள்ளது. சுமார் ஒரு வார காலப்பகுதியில், ஆறு விமான சரக்குகளின் உதவி இந்தியாவில் தரையிறங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.