1200 ஆவது நாளை எட்டியது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டம்

0
171

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 1200 ஆவது நாளை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டமொன்று, வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 12.15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவின் கொடிகளையும் ஏந்தியவாறு, “சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள், தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதையற்றவர்கள்” என்ற வாசகம் தாங்கிய பதாதை தாங்கியிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் உடையை அணிவித்துள்ளமை போன்றதானபுகைப்படமொன்றினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது அதிகளவிலான புலனாய்வாளர்கள், குறித்த போரட்டத்தினை புகைப்படமெடுத்ததுடன் அங்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.