ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்த திட்டம்

0
70

டெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணியினர், ஒரு வார காலத்திற்கு விருந்தகங்களில் தனிமைப்படுத்தப்படுவார்களென ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி நிசாமுடீன் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பங்களாதேஷ் அணியினர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்களென தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கைக்கு வருகை தந்த அடுத்த நாளே அவர்கள் பயிற்சிகளை ஆரம்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் தரப்பினர், பங்களாதேஷ் அணியினரை தனிமைப்படுத்தும் நாள் எண்ணிக்கையினை குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனையினை மேற்கொண்டு வருவதாக, டாக்காவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நேரடியாக கொழும்பிற்கு வருகை தரவுள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உப தலைவர் ரவின் விக்ரமரத்னவிடம் எமது செய்திச் சேவை வினாவிய போது, பங்களாதேஸ் அணியினரை இலங்கையில் தனிமைப்படுத்துவதற்கான கால எல்லை குறித்து இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டியினை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள், அமைச்சின் ஊடாக வழங்கப்படவில்லை எனவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உப தலைவர் தெரிவித்தார்.