கொரோனா தொற்றை அடுத்து ஊழியர்களை பணிநீக்கும் அரச நிறுவனங்கள்

0
390

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பல அரச நிறுவனங்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைக் குறைத்து தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றுநோய் காரணமாக அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்தும் அதேவேளை, தொழிலாளர் வர்க்கத்தின் மீது அதன் சுமைகளைச் சுமத்தும் ஜனாதிபதி ராஜபக்சவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது 7500 ஊழியர்களின் மே மாத சம்பளத்தை இதுவரை செலுத்தவில்லை.

அத்துடன் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ‘விரைவில்’ வழங்கப்படும் என்று நிர்வாகம் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது. சம்பளம் தாமதத்திற்கு காரணம் நிறுவனம் நஸ்டத்தில் இயங்குதே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 25 சதவீதம் வரையும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் பணிப்பாளர்கள் மூன்று மாத கால சம்பளத்தைக் குறைப்பதாக அறிவித்தனர்.

மேலும் 2020ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சேவை தொடர்பான சுமார் 1500 ஊழியர்களில் ஒரு மாதத்திற்கு 75 வீதத்திற்கும் அதிகமானோருக்கு  சம்பளம் இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும் ஊழியர்களின் எதிர்ப்புக் காரணமாக அவர்களின் உணவு கொடுப்பனவைக் குறைக்கும் திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.