இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் போர்டு வசம் பெரேரா சமர்ப்பித்துள்ளார். அதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க இதுவே சரியான தருணம் என்று உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 32 வயதான பெரேரா இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 166 ஒருநாள் போட்டிகள், மற்றும் 84 T-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த போதும் உலக அளவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து பெரேரா விளையாடுவார் என தெரிகிறது. இதுதொடர்பாக பெரேரா இலங்கை கிரிக்கெட் போர்டு வசம் எழுதி அனுப்பிய கடிதத்தில், “இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஏழு உலக கோப்பைகளில் பங்கேற்றுள்ள பெருமையை எனக்கு அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டT-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது என்னுடைய வாழ்விற்கு மிக முக்கியமான தருணம் ஆகும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவரின் சர்வதேச ஓய்வுக்கான கடிதத்தை ஏற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் போர்டு அவரின் பங்களிப்பிற்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் போர்டு சிஇஓ ஆஸ்லே டி சில்வா கூறுகையில், “பெரேரா ஒரு மிகச் சிறந்த சகலதுறைவீரர். இலங்கை கிரிக்கெட் அணிக்காக அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த நாட்டிற்காக கிரிக்கெட் போட்டிகளில் அவரது அளித்துள்ள பங்களிப்பு என்றும் நீங்காத நினைவாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: