சுயஸ் கால்வாயில் தொடரும் போராட்டம்-கப்பல் பற்றிய முக்கிய தகவல்கள்!

220

சுயஸ் கால்வாயின் குறுக்காக அடைத்து நிற்கும் இராட்சத கொள்கலன் கப்பலை மீண்டும் மிதக்கவிடும் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

எனினும் இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த கால்வாய் அதிகாரிகள் இந்த கப்பலை இன்றைய தினத்திற்குள் மீண்டும் மிதக்கவிட எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

உலகின் மிக பரபரப்பான இந்தக் கால்வாயில் எவர் கிரீன் என்ற இந்தக் கப்பல் வேறு எந்த கப்பலும் செல்ல முடியாத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் முழுமையாக அடைத்து நிற்கிறது.

இந்தத் தடங்கலால் இரு மருங்கிலும் 300க்கும் அதிகமான கப்பல்கள் சிக்கியுள்ளன.

சில கப்பல்கள் ஆபிரிக்காவை சுற்றி தமது பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கப்பல் நகர்வதற்கு வசதியாக கரைப் பகுதியில் உள்ள சுமார் 20,000 தொன் மணல் தோண்டி எடுக்கப்பட்டு 14 இழுவை படகுகள் மூலம் கப்பல் இழுக்கப்பட்டது.

எனினும் கடும் காற்று மற்றும் அலை இந்த முயற்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கப்பலை இரண்டு பக்கமாகவும் 30 பாகை அளவு நகர்த்துவதற்கு இழுவை படகுகளால் முடிந்துள்ளது.

இந்த சிறிய வெற்றியை கொண்டாடும் வகையில் இழுவை படகுகள் ஒலி எழுப்பிய காட்சி ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கப்பலுக்கு கீழால் நீர் ஓட்டம் ஏற்பட்டுள்ளது என்று சுயஸ் கால்வாய் அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் ஒசாமா ரபீ தெரிவித்தார். “எந்த நேரத்திலும் கப்பல் சறுக்கி, அது தற்போது இருக்கும் இடத்தில் இருந்து நகரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 2,20,000 தொன் மொத்த எடையுள்ள அந்தக் கப்பலில் தற்போது 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளன. ஒருவேளை இழுவைப் படகுகள் மற்றும் தூர் வாரும் முயற்சிகளால் கப்பல் மீண்டும் மிதக்கவில்லை என்றால் சில பெட்டகங்களை இறக்க வேண்டியிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இயக்க மிகப்பெரிய பளுதூக்கிகள், கரைக்குக் கொண்டு செல்ல வேறு கப்பல்கள் மற்றும் சிறப்புக் கருவிகள் தேவைப்படும். இது நேரத்தை இன்னும் அதிகமாக்கும்.

முன்னதாக, சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தால் கூடுதலாக இழுவைப் படகுகள் வரவழைக்கப்படும் என்று சுயஸ் கால்வாய் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12 வீதம் சுயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது.

இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.

கால்வாயில் ஏற்பட்ட தடை, உலக வர்த்தகத்தில் தாக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பதோடு எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், சில கப்பல் நிறுவனங்கள் மாற்று வழிகளை முயன்று வருகின்றன.

சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா – ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆபிரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.

ஆனால் அதற்கு சுமார் இரண்டு வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும்.

2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் என்று சுயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.

2017ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுவை படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.

‘எவர் கிவன்’ கப்பலை பற்றிய முக்கிய தகவல்கள்

எவர் கிவன் 400 மீற்றர் நீளம் (1,312 அடி) மற்றும் 200,000 டொன் எடை கொண்டது, அதிகபட்சமாக 20,000 கொள்கலன்கள் கொள்ளளவு கொண்டது.

தற்போது 18,300 கொள்கலன்களை கொண்டு செல்கிறது.

இந்த கப்பல் தாய்வானிய போக்குவரத்து நிறுவனமான எவர்க்ரீன் மரைன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றாகும்.

செவ்வாய்க்கிழமை முதல் இது சூயஸ் கால்வாயில் சிக்கித் தவிக்கிறது, நீரோட்டமாக ஓடி, நீர்வழியின் குறுக்கே பக்கவாட்டாக சிக்குண்டது. முதலில் ஒரு காற்றழுத்தம் இந்த நிலைமைக்கான காரணம் என்று கருதப்பட்டது.

அந்த நேரத்தில் காற்றின் வேகம் 74 கிலோ மீற்றர் வேகத்தில் பதிவு செய்யப்பட்டது, ஆனால் சூயஸ் கால்வாய் ஆணையம் (SCA) செய்தியாளர்களிடம், கப்பல் சிக்கித் தவிக்க இது ஒரே காரணம் அல்ல எனக் கூறியது.

இந் நிலையில் தொழில்நுட்ப அல்லது மனித பிழைகள் ஏற்பட்டதா என்பதை விசாரிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அடைப்பின் இருபுறமும் 193 கி.மீ (120 மைல்) கால்வாய் வழியாகச் செல்ல 369 கப்பல்கள் காத்திருந்தன.

இதற்கிடையில், பிராண்ட் கண்காணிப்பு தளமான பிராண்ட்மென்ஷன்களின் நிகழ்நேர பகுப்பாய்வின்படி, #SuezBLOCKED என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் 145,200 க்கும் மேற்பட்ட சமூக தொடர்புகள் உள்ளதாக கூறியுள்ளது.

உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம், சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் சுமார் 8 சதவீத திரவ இயற்கை எரிவாயு ஒவ்வொரு நாளும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன.

கால்வாயின் வருவாய் ஒவ்வொரு நாளும் 14- 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொடுக்கிறது. தொற்றுநோய்க்கு முன்னர், சூயஸ் கால்வாய் வழியாக வர்த்தகம் எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத பங்களிப்பினை வழங்கியதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி சனிக்கிழமை கூறினார்.