நேர்மையாக இருந்தால் என்ன கிடைக்கும்; கன்னத்தில் அறைந்தால்போல் பதில் கொடுத்துள்ள மன்னார் கிராமசேவகரின் கொலை!

15414

வாழ்க்கையில் எல்லா விடயங்களிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு இந்த உலகம் கொடுத்த பெயர் பச்சத்தண்ணி, பிழைக்க தெரியாதவன், உருப்படாதவன்.

நேர்மையாக இருந்தால்தான் மரியாதைக்குரியவர்கள் என்ற காலம்போய், நேர்மையாக இருப்பவர்களை கிண்டல் செய்யும் நவீன உலகம் இது.

”ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பார்கள்” மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரும் ஆனால் அந்த மரணம் எதற்காக வருகிறது, அந்த நபர் மரணமைடைந்த பின் எத்தனை பேர் துயரமடைகிறார்கள் என்பதில்தான் அந்த மனிதனின் முழு வாழ்க்கைக்குமான அர்த்தம் கிடைக்கின்றது.

அந்த வகையில் நேர்மைக்கான சமீபத்திய உதாரணாமாக மக்களால் போற்றப்படுகின்றவர்தான் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும், சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவருமாகிய கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவரின் மரணம்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார், இந்த சம்பவம் அனைத்து தமிழர்களிடையும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருவதுடன் ஒரு நேர்மையான மனிதனை இழந்துவிட்டோம் இது நடந்திருக்க கூடாது என உண்மையாக வருத்தப்பட்டனர், சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கான இரங்கல் செய்திகளையும், தங்களது வருத்தங்களையும் பகிர்ந்து வருகின்றனர் தமிழர்கள்..

நேர்மையாக இருந்தால் என்ன பலன்? நேர்மையாக இருந்து என்ன சாதனை படைக்கப்போகிறாய் என கேட்பவர்களுக்கு கன்னத்தில் அறைந்தால்போல் நேர்மையாக இருப்பதே இங்கு ஒரு சாதனைதானடா என இந்த சமூகத்திற்கு பதில் கொடுத்துள்ளது எஸ்.விஜியேந்திரனின் அவர்களின் மரணம் என்றால் மிகையாகாது.