மதுபானம் இல்லாமல் நடக்குமா மாகாணசபை தேர்தல்? நடராசா ஜெயகாந்தன்!

163

இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக மதுபானம் இருந்ததாக பரவலான குற்றச்சாட்டுக்கள் காலம்காலமாக எழுந்துவருகின்றன.

அதிலும் வன்னியில் தேர்தல் நேரங்களில் மதுக்கொடுத்து வாக்கு வாங்குகின்ற நிலைமை கடந்த காலங்களிலிருந்து இருந்து தற்போது மிகவும் அதிகரித்து வருகின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் யாழ்பணம், வன்னி தேர்தல் தொகுதிகளில் இந்த மதுபான கலாச்சாரம் இம்முறை நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அதிகமாக காணப்பட்டமையை அவதானிக்க முடிகிறது,

வன்னியில் இந்த மதுபான கலாச்சாரத்தை பயன்படுத்தி தேர்தலில் வென்றுவிடலாமென்ற எண்ணம் மேலோங்கியிருந்த காரணத்தில்தானோ என்னவோ கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னியில் அறிமுகமில்லாத, வாக்குரிமை இல்லாதவர்கள்கூட வன்னியில் வென்றுவிடலாமென்ற எண்ணத்தில் பெருந்தொகையான மதுபான போத்தல்களுடன் களமிறங்கியிருந்தார்கள், கணிசமான வாக்குகளை பெற்று வெற்றியின் பக்கத்திலும் சென்றிருக்கிறார்கள்.

தவிர வன்னியில் களமிறங்கும் இறக்குமதி வேட்ப்பாளர்களுக்கே இந்த சூசகம் தெரிந்திருக்கும்போது வன்னியில் பிறந்து வளர்ந்து அரசியல் செய்யும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமலாயிருந்தது.

வன்னியில் தேசிய கட்சிகளில் போட்டியிட்ட இறக்குமதி வேட்ப்பாளர்களும் உள்ளூர் வேட்ப்பாளர்களும் மதுபானம் வழங்குவதில் போட்டிபோட்டுக்கொண்டிருக்க, தமிழ் தேசிய கட்சியில் வருடவருடமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துகொண்டு கொழும்பில் உல்லாசமாக வாழ்ந்துவிட்டு வேடன் தாங்கள் பறவைகளை போல் தேர்தலுக்காக வன்னிக்கு வருபவரும், கடந்த தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மைந்தன் என்ற புதிய பாராளுமன்ற உறுப்பினரும் நடந்து முடிந்த கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தேசிய கட்சிகளுக்கு சற்றும் சளைத்தவர்களில்லையென தங்களின் முகவர்களூடாக நகரத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆண் வாக்காளர்களுக்கு கல் சாராயமும், கிராமத்து வாக்காளர்களுக்கு கள்ளச்சாராயமும் தங்களின் முகவர்களூடாக தேர்தலுக்கு முதல்நாள் இரவும், தேர்தல் தினத்தில் காலையிலும் வழங்கி வாக்கை அபகரித்து வெற்றியீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.

வேட்ப்பாளர்களின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு சில வாக்காளர்கள் அதிகமாக போதையாகி கிடந்ததால் சிலர் பல இடங்களில் வாக்களிக்க செல்லாமலிருந்த சம்பவங்களும் கடந்த தேர்தல்களில் இடம்பெற்றிருந்தது, இப்படியான செயற்பாடுகளால் வாக்களிப்பு வீதமும் குறைகின்றது.

மதுவிற்கு அடிமையாகி, மதுபானங்களை, கள்ளச்சாராய (வடி) போத்தல்களையும் வாங்கி குடித்துவிட்டு போதையில் சென்று வாக்களித்துவிட்டு, தற்போது தாங்கள் நிராகரிக்க நினைத்த வேட்ப்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகி சென்ற இடமெல்லாம் தூங்குகிறார்களே, தமிழ் தேசியத்தை அடகு வைத்து சலுகைகளுக்காக செல்கிறார்களே என குற்றவுணர்வில் பல தமிழ் வாக்காளர்கள் புலம்பிக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இந்த வாக்குரிமையை பெற எம் முன்னோர்கள் எவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்தார்களென்பதையும், வாக்குரிமையின் பெறுமதி அல்லது மதிப்பு உங்களுக்கு தெரிய வேண்டும், டொனமூர் அரசியல் சீர்திருத்த விசாரணைக் குழுவின் சிபாரிசின்படி, 1931 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பு 1931 ஜூன் முதல் 1947 ஓகஸ்ட் வரை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் 1931 ஜூன் மாதத்திலும், 1936 மார்ச் மாதத்திலும் இரண்டு பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941 இல் நடைபெற வேண்டிய பொதுத்தேர்தல்கள் கைவிடப்பட்டன.

அப்போது இலங்கை முழுமையான விடுதலை பெறவில்லை, பதிலாக டொமினியன் அந்தஸ்தையே பெற்றது. நாட்டின் இராணுவ நிலைகள் பிரித்தானியாவின் கீழேயே இருந்தன. நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர்ந்து இருந்து வந்தது.

பல போராட்டங்களின் பின் 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது, அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை 8 ஜனாதிபதி தேர்தலையும், 16 பொதுத்தேர்தலையும் (பாராளுமன்ற தேர்தல்), பல மாகாண சபை தேர்தலையும், உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல்களையும் சந்தித்திருக்கின்றன.

தேர்தல் என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும், எளிமையாக சொல்லப்போனால் ஒரு நாட்டு மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும், தங்களை ஆளும் பிரதிநிதிகளை தாங்களே தெரிவு செய்துகொள்ளும் ஒரு அரிய கொடையே இந்த தேர்தல் முறை, மேற்கத்தியவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்த இலங்கை மக்களுக்கு வரமாக கிடைத்த இந்த தேர்தல் முறைமையை இந்த நாட்டு மக்கள் சிலர் எளிதாக எடுத்துக்கொள்கின்றனர் எனவே தெரிகிறது.

ஏலவே! தேர்தலின் முக்கியத்துவத்தை இந்நாட்டு மக்கள் உணர்ந்திருந்தால், ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்களிப்பு விகிதம் 90% வீதத்தையாவது அடைந்திருக்க வேண்டும் ஆனால் இப்படியான வாக்கு வீதத்தை சுதந்திர இலங்கை இன்னும் அடையவே இல்லை.

தவிர 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும், இந்நாட்டின் குடிமகனாக இருக்கவேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகளுடன் சிந்திக்க தெரிந்த, நாட்டின் மீது பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பல பரிசீலனைகளுக்கு பின்னர் ஒரு வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமையை மதுபோதையில் வாக்களிக்க வாக்காளர் சொல்கிறாரா என அறிந்துகொள்ள எந்தவித பொறிமுறையும் இல்லாமல், ஒருவர் மதுபோதையில் வாக்குரிமையை பயன்படுத்தும் சூழல் இருக்கின்றது என்பது எவ்வாறான செயற்பாடாக கருதுவது.

ஜனநாயக தேர்தலில் எத்தனை பேர் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமையென சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும், பண பலத்துடன், அதிகார மோகத்திற்காகவும், அந்தஸ்திற்காகவும் போட்டியிடும் பணபலம் கொண்டவர்களின் வெற்றிக்கு ஏதுவாக இந்த மதுபானம் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்படையாக சொல்லப்போனால் தற்போதையை தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இந்த மதுபானம் பங்கு வகிக்கின்றது என்பதுதான் சமூக அக்கறையுள்ள சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

இப்படியாக மதுபானம் வழங்கி வாக்குகளை பெற சாதாரண சமூக அக்கறையுள்ள, நேர்மையான அரசியலை செய்யவேண்டுமென்ற அவாவுடன் உள்ளே வரும், நியாயமான வேட்ப்பாளர்கள் மக்கள் பிரதிநிதியாக தெரிவாகாமல் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன, இது தொடர்பில் வாக்காளர்களிலும் பலர் ஜோசிப்பதுமில்லையென்றே தோன்றுகிறது.

தேர்தல் நேரங்களில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வேட்ப்பாளர்களின் சின்ன சின்ன தேர்தல் விளம்பரங்கள், உட்பட்ட பல செயற்பாடுகளில்கூட பல கட்டுப்பாடுகளை விதிக்கும் தேர்தல் திணைக்களம், மதுபோதையில் இருப்பவர்களை கண்டறிவதற்கு சரியான வழிமுறையில்லாமல் மதுபோதையில் சென்று ஒரு நாட்டின் பிரதிநிதியை தெரிவு செய்ய அனுமதிப்பதென்பது எந்தவகையான ஜனநாயக தேர்தல் முறையென சமூக அக்கறையுள்ளோர் கேள்வி எழுப்புகின்றனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் விபத்து ஏற்படும், அதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுமென சிந்தித்து மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை இடைமறித்து கண்டறிந்து, உறுதிப்படுத்தி கைது செய்து சிறையிலடைப்பதுடன், தாற்காலிகமாக வாகன உரிமையை ரத்து செய்ய சட்டம் உள்ள இந்த நாட்டில். ஒரு நாட்டின் இறையாண்மையையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும், தீர்மானிக்கும், புதிய சட்டங்களை உருவாக்க வல்ல பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கப்போகும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலில் மது போதையில் வாக்களிக்க செல்பவர்களை கண்டறிய எந்தவித பொறிமுறையையும் உருவாக்காமல் போதையில் வாக்களிக்க அனுமதிப்பதென்பது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆகவே இந்தாண்டு நாடுமுழுவதும் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலுக்கு முன்பாகவே, தேர்தல் ஆணையம் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு மதுபோதையில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களை கண்டறிவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கி போதையில் வாக்களிப்பதை தடைசெய்ய வேண்டும் என்பதுடன், மீறி வாக்களிப்பவர்களை கைது செய்வதுடன் அவர்களின் வாக்குரிமையை நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ ரத்து செய்வதுடன், இந்நாட்டு அரசினால் குறித்த வாக்காளருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் இடைநிறுத்தல் தொடர்பான சட்ட விதிமுறையை பரிசீலித்து உருவாக்குவதுடன், ஏனைய தேர்தல் சட்ட விதிமுறைகளை இன்னும் இறுக்கமாக பின்பற்றி ஜனநாயக மிக்க தேர்தலில் 100% ஜனநாயகத்தை உறுதி செய்து வளமான நாடான இலங்கையை சிறந்த மக்கள் பிரதிநிதிகள் மூலம் முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த நாட்டின் குடிமகனான ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: