யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
183

யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்தியநிபுணர்

தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வாரம் டெங்கு விழிப்புணர்வு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெங்கு நோய் கடந்த 20 வருடமாக இலங்கையின் பல பகுதிகளிலும் மக்களைத் தாக்கிவருகின்றது. குறிப்பாக 15 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களையும் சிறுவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகின்றது. இது நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோயாகும்.

இந்த நோயினால் கடந்த வருடம் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் 8 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்குரிய சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டன.

எனினும் இந்த வருடம் மே மாதம் வரை 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் கூடுதலாக இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்தக் காலப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகம்.

அதேபோன்று கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கூடுதலாக சங்கானை உரும்பிராய் நீர்வேலி சுண்டுக்குளி போன்ற இடங்களில் இருந்து நோயாளர்கள் கூடுதலாக வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்த நோய் நுளம்பினால் பரவுகின்ற ஒரு நோயாகும். எங்கேயாவது நல்ல நீர் தேங்கி நிற்கும் இடங்களில் இது உருவாகின்றது. சிரட்டை அல்லது ஐஸ்கிரீம் குவளைகள் தகரப் பேணிகள் முதலானவற்றைக் கண்ட இடங்களில் எறியும் போது மழை பெய்யும்போது இதில் நீர் தேங்கி நின்று அந்த நீரில் நுளம்புகள் முட்டையிடும் அந்த முட்டை பொரித்து 5 தொடக்கம் 10 நாட்களுக்குள் அது நுளம்பாக மாற்றமடைந்து அந்த நுளம்பு முட்டையில் டெங்கு வைரஸ் இருக்கலாம். அந்த நுளம்பு இந்த வைரஸினை காவிக்கொண்டு மக்களை கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகின்றது.

இந்த நுளம்புகள் குறிப்பாக மாலை வேளைகளில் தான் அதிகமாக மக்களை தேடிச்சென்று கடிக்கின்றது எனவே மக்கள் வீடுகளில் இருக்கும் போது மாலை நேரங்களில் தமது அறையின் கதவுகளை தாழிட்டு இருப்பது மிகவும் சிறந்தது.

அல்லது கொல்லி மருந்துகள் மற்றும் நுளம்புத்திரி போன்றவற்றை கொளுத்தி வீடுகளில் வைப்பதன் மூலம் குறித்த நுளம்பு தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் யாழ் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்தார்.