யாழ் மக்கள் அன்று விட்ட தவறும் இன்று பல்கலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை உடைக்க காரணம்!

1666

யாழ் மக்கள் அன்று விட்ட தவறும் இன்று பல்கலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை உடைக்க காரணம்; நடராசா ஜெயகாந்தன் ..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர்.

மேலும் இந்நிலையில் அங்கு நின்றிருந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றபோது கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர் என மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராமநாதன் வீதி எங்கும் யாழ். பல்கலை மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் திரண்டுள்ளனர்.மேலும் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றம் நீடிக்கிறது.

தற்போதைய நிலைமை இப்படியிருக்க, இந்த நிலை யாழ்ப்பாணத்தில் உருவாங்குவதற்கான பின்னணியென்ன என்பதனை சற்று விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2009-ம் ஆண்டிற்குப்பின்னர், இலங்கையின் வடக்கு, கிழக்குவாழ் தமிழர்கள் உரிமைப்பிரச்சினைகளையும், பொருளாதார பிரச்சினைகளையும் ஒரு சேர எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

இருந்த போதும் கிழக்கு அரசியலில் ஏற்படுள்ள மாற்றம், கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் சார்ந்த பிரதிநிதிகளை தேர்வு செய்ததற்கு தூண்டியிருந்தது, அதற்கு காரணம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தான்றோன்றித்தனமான அரசியல் முடிவுகளாகவே இருந்தது.

ஆனால் வன்னியில் வறுமையில் மக்கள் இருந்ததாலும், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களின் செயற்பாட்டாலும் மாற்று இனத்தவர்களும், அதிஷ்ரத்தின் மூலம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் கடந்த முறை பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் செல்வந்தர்களாக இருக்கின்ற மக்கள், தங்களுடன் இருக்கும், வசிக்கும் ஏழை மக்களை அரவணைத்து சென்றிருந்தால் அடிப்படை வசதிகளுக்காக கையேந்தி தேசியம் சார்ந்து எத்தனையோ கட்சிகள், தலைவர்கள் இருக்க டக்ளஸ் தேவானந்தாவையோ, அங்கஜன் இராமநாதனையோ வாக்களித்து வெற்றிப்பெற வைத்திருப்பார்களா? அதிலும் அங்கஜன் இராமநாதன் யாழ் தேர்தல் மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்குகளில் வெற்றிபெற்றது, யாழ்ப்பாணம் தேசியத்தை ஓரங்கட்டிவிட்டது என்ற எண்ணத்தை இலங்கை அரசாங்கத்திற்கு உருவாக்கிவிட்டது.

இந்த சம்பவங்களின் எதிரொலியாகத்தான் கடந்த காலங்களை விட தங்களது நோக்கங்களை எளிதாக அடைந்துவிடலாம் என்ற எண்ணத்தில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலை, நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டிருக்கலாம்.

யாழ்ப்பாணம் பல்கலை, நிர்வாகத்திலிருப்பவர்களும் யாருடை சிபாரிசில், ஆதரவில் அந்த பதவிக்கு வந்தார்கள், அவர்கள் யாருக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாதா என மக்களும் பேசுகின்றனர்.

ஆக, தேசியம் மறந்து அல்லது புறக்கணித்து விட்டதாக கடந்த தேர்தலில் யாழ்.மக்கள் வழங்கிய தீர்ப்பின் எதிரொலியே இந்த சம்பவம், இன்று போய் வீதியில் நின்று என்ன செய்ய முடியும், திருடனிடம் சாவியை கொடுத்த கதையாகத்தான் இருக்கு தற்போதைய நிலை..

இனிவரும் காலங்களிலாவது சரியான முடிவுகளை எடுங்கள், கிளைகளை வெட்டுவதை விடுத்து விதைகளை மாற்றுங்கள்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: