“ராஜீவ் கேல் ரத்னா” விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயர் பரிந்துரை

0
138

விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவின் பெயரை இந்திய கிரிக்கெட் சபை பரிந்துரை செய்துள்ளது.

இதே போல அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவன், தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

இதற்காக எல்லா விளையட்டு சங்கமும் சிறந்த வீரர்களின் பெயர்களை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். இந்நிலையில், பிசிசிஐ சார்பில் ரோஹித் சர்மா பெயரை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்தாண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டி-20 கிரிக்கெட்டில் 4 சதம் பெற்றுள்ளதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் இரு சதங்கள் விளாசியுள்ளார்.

இதேபோல அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஷிகர் தவன், ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 மற்றும் 3000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்த இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற பெருமை பெற்றவர்.

அதேபோல இஷாந்த் சர்மாவும் ஆசியாவுக்கு வெளியே அதிகவிக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.