இலங்கையில் மலையக மக்கள் இதுவரைப்பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று, மலையகத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி தனிநபரொருவர் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளார்.

நுவரெலியா- பூண்டுலோயாவைச் சோ்ந்த சண்முகம் மகேஸ்காந் (26 வயது) என்ற இளைஞரே, மட்டக்களப்பு ஓளவையார் சிலைக்கு கீழ் அமர்ந்து, “மலையகத்தின் ஒரு குரல்”, “விடுதலை வேண்டும்” ஆகிய சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

போராட்டம் தொடர்பாக குறித்த இளைஞன் தெரிவித்துள்ளதாவது, “நுவரெலியா- பூண்டுலோயா டன்சன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான், எனது தந்தை உயிரிழந்தமையினால் தாயார் மற்றும் இரு சகோதரிகளுடன் கடந்த ஜனவரி மாதம், மட்டக்களப்பு- வாழைச்சேனை பகுதியில் வந்து குடியேறினோம்.

கடந்த 26 வருடங்களாக அந்த கிராமத்தில் தான் வசித்து வந்தோம். இன்று வரை எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. 

இவ்வாறு எமது மக்கள் பல அவலங்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

உனக்காகவும் உனது குடும்பத்துக்காகவும் வாழத் தொடங்கும்போது நீ மனிதனாகின்றாய். 

நீ உன் குடும்பம் வாழ்வது போல உன் சமூகம் வாழ வேண்டும் என்கின்றபோது நீ மாமனிதனாகின்றாய் என அறிஞர்களின் கோட்பாட்டு தத்துவங்களின் அடிப்படையில் நான் எனது சமூகத்தை நேசிக்கத் தொடங்கினேன்.

வாக்குகளுக்காக வருகின்ற தலைவர்கள் அதே பாதையில் வருகின்றார்கள், செல்கின்றார்கள். அதேபோல எமது மக்களுக்கு ஏதாவது இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் வந்து பார்ப்பதும் இல்லை, நிவாரணம் வழங்குவதும் இல்லை, உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் இல்லை இப்படி பல உள்ளன.

கம்பனிகளிடம் கேட்டால் நஷ்டத்தில் செல்லுகின்றது என்கின்றனர். 

இதனை அரசு கேட்க வேண்டும் அல்லது நாங்கள் அனுப்பிய பிரதிநிதிகள் கேட்க வேண்டும் அல்லவா?

நாங்கள் அனுப்பிய ஆறுமுகம் தொண்டமான், திகாம்பரம் எங்களுக்காக பேசவில்லை பணத்துக்காக பேசினார்கள். 

கொரோனா நோய் வந்ததன் பின்னர் எங்கள் மக்கள் உழைத்துதான் சாப்பிட்டனர். இங்கு 85 வீதமான உரிமை கிடைக்கின்றது பாதிக்கப்பட்டால் கேட்டு கிடைக்க கூடிய சூழ்நிலை இருக்கின்றது. 

ஆனால் எங்கள் மக்களுக்கு அப்படியல்ல. எது எப்படி இருந்தாலும் உழைத்துதான் வாழவேண்டும்


எல்லோரும் முககவசம் போட்டு நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். எமது மக்கள் பலாக்காயை மட்டும் உண்டு வாழுகின்றனர். அரசு கொரோன நோயின் பின்னர் வீட்டுத் தோட்டங்கள் செய்யுங்கள் என்கின்றனர். 

ஆனால் எங்கள் மக்களுக்கு வீட்டுத் தோட்டம் செய்ய இடமில்லை

ஏனைய சமூகம் வாழுவது போல எமது மக்களும் வாழ நிலங்களை பகிர்ந்தளித்து கொடுக்க வேண்டும். 

மலையக மக்கள் இதுவரைபட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

எனவே இவ்விடயங்களுக்கு உரிய தீர்வை அரசாங்கம் பெற்றக்கொடுக்கும் வரை இந்த உண்ணாவிரத போராட்டம் தொடரும். மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றைய அனைத்தும் மாறிவிடும்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here