1.2 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கால் தடங்கள் கண்டுபிடிப்பு

0
135

சவூதி அரேபியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தின் ஒரு பழங்கால ஏரியில் 1.2 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்ட சவூதி அரேபியா, அரேபிய தீபகற்பத்தில் பழமையான வசிப்பிடத்தின் முதல் அறிவியல் சான்றுகள் என இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

புறநகர் பகுதியில் உள்ள இந்த வரண்ட ஏரியைச் சுற்றிலும் மனிதர்கள், யானைகள் மற்றும் மான்கள் போன்ற விலங்குகளின் கால்தடங்கள் கிடைத்துள்ளன. 

இதுவரை சுமார் 233 யானைகளின் புதைபடிவங்கள், ஏழு மனிதர்கள், 107 ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகளின் தடயங்களை அகழ்வாராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. தொல்பொருள் ஆணையத்தின் தலைமை நிர்வாகி கலாநிதி ஜாசர் அல் ஹெர்பிஷ் கூறியதாவது: 

“மான், ஏழு மனிதர்கள், 107 ஒட்டகங்கள், 43 யானைகள் மற்றும் பிற விலங்கு தடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தடயங்கள் விலங்குகள் கூட்டமாக நகர்ந்து கொண்டிருந்ததைக் குறிக்கின்றன” என்று தெரிவித்தார். 

சுற்றுலா மற்றும் பாரம்பரியத்திற்கான சவூதி ஆணையம் இது இந்த ஆண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளது.