20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றிய பின்னரே மாகாண சபைத் தேர்தல்!

0
38

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டுமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. 

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

தொகுதிவரித் தேர்தல், விகிதாசாரத் தேர்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறையின் படி மாகாண சபைகளுக்குரிய தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், மாகாணங்களின் எண்ணிக்கைகளைக் குறைப்பது குறித்துப் பரிசீலிப்பதாகவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டமையினால் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து நிறைவேற்றிய பின்னரே தேர்தலை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன. 

ஆனால் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அவ்வாறு விசேட பிரேரணை சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லையென்றும் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லையென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைகளுக்கான 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யவுள்ளதாக மாகாண சபைகள் பொதுச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென முதன் முதலில் குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட தற்போது இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அதிகாரப் பரவலாக்கத்தைச் செய்யும் நோக்கில் 1987இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டதே மாகாண சபைகள் முறை என்பது குறிப்பிடத்தக்கது.