கொடிய நோய்களையும் சுக்குநூறாக்கும் சுக்கு!

109

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவற்றில் மட்டுமல்ல சீன மருத்துவத்திலும், ஜப்பானின் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் முதன்மையான இடம் சுக்குக்கு (வேர்க்கொம்பு-இலங்கை வழக்கு) உண்டு.

செவ்விந்தியர்களும் சுக்கை தங்கள் மருத்துவத்தில் பிரதானமான பொருளாக வைத்திருக்கிறார்கள். இது, இஞ்சியாக இருக்கும்போது அலாதியான பல மருத்துவப் பயன்களைக் கொடுக்கும்; காய்ந்து சுக்கானதும் வேறு பல நல்ல பலன்களைக் கொடுக்கும்

“காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த…” என சித்த மருத்துவப் பாடலே உண்டு. காலை பல் துலக்கியதும் இஞ்சியையும், மதியம் சுக்குத் தூளையும் உணவுக்கு முன் எடுத்துக்கொள்வதன் மூலம், நோய்கள் பலவற்றை நம்மை அணுகாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறது இந்தப் பாடல்.

இனி, சுக்கின் பலன்களைப் பார்ப்போம்… பித்தத்தைச் சீராக்காவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் உண்டாகும். வயிற்று உப்புசம், தலைவலியோடு ரத்தக்கொதிப்பும் ஏற்படும். உளவியல் சிக்கலுக்குக்கூட அடித்தளம் இடும். சுக்குத்தூள் ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னைகளை வேரறுக்கும் ஒன்று. சுக்கு, பித்தத்தை சமன்படுத்தும்.

லேசான காய்ச்சல் தலைவலிக்கு சுக்குத்தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். சில சமயங்களில் சுக்கு, குழந்தைகளின் தோலைப் புண்ணாக்கிவிடும். எனவே, எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த சுக்கு பற்றுப் போடக் கூடாது.

சுக்கு, கொத்தமல்லி விதை இரண்டையும் சம அளவு எடுத்து, காபித்தூள் போலப் பயன்படுத்தி கஷாயம் செய்து, அதனுடன் பனைவெல்லம் சேர்த்து, வாரம் இருமுறை மாலை வேளைகளில் சாப்பிடலாம். அஜீரணம் உள்ளவர்களுக்கு அந்தப் பிரச்னை ஓடிப்போகும்.

பித்தத்தால் வருவது மைக்ரேன் தலைவலி. அதோடு இலவச இணைப்பாக வயிற்றுவலியும் வந்துவிடும். சுக்குத்தூள் மைக்ரேன் தலைவலிக்கு மிகச் சிறந்த மருந்து. மூன்று சிட்டிகை சுக்குத்தூளைத் தேனில் குழைத்து, உணவுக்குப் பின் காலையும் மாலையும் என 45 நாட்கள் சாப்பிட்டுவர, தலைவலி காணாமல் போய்விடும்.

இஞ்சியின் மேல்தோலை சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறப்போட்டு, காலையில் அந்தத் தேனோடு சேர்த்துச் சாபிட்டால் தலைவலி சரியாகும்.

சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும், மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலும் பித்தத் தலைவலி வரும். இதற்கு மருந்தாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ‘இஞ்சி ரசாயனம்’ நல்ல மருந்து.

கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும்.

சிலருக்கும் பயணத்தின்போதும், மலைப் பயணத்தின்போதும் குமட்டல் ஏற்படும். அதற்கு சுக்குத்தூள் சிறந்த மருந்து. சுக்குக் கஷாயத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி, சுக்குத்தைலம் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் வேறு சில மூலிகைகளோடு கலந்தும் சுக்குத்தைலம் கிடைக்கும். இதைத் தலையில் தேய்த்தால், சைனஸால் வரும் தலைவலி சரியாகிவிடும்.

காதுக்குள் இரைச்சல் கேட்கும் பிரச்னை (Minears), காதில் சீழ் கோக்கும் நோய் (CSOM), காது இரைச்சலால் தடுமாற்றம் (வெர்டிகோ) பிரச்னைகளுக்கு சுக்குத்தைலம் தேய்த்துக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.

25 ஆண்டுகளுக்கு முன்பே நியூயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ், சுக்கு பக்க விளைவு இல்லாத தலைவலி மருந்து என்பதை உறுதிசெய்திருக்கிறது.