முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

முதன்முறையாக இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது பங்களாதேஷ்

ஜூனியர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி இந்தியாவை வீழ்த்தி 3 விக்கெட்டுகளால் சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. இவ் வெற்றியினால் சர்வதேச கிரிக்கெட் தொடரொன்றில் முதன்முறையாக கிண்ணத்தை வென்று பங்களாதேஷ் அணி சாதனை படைத்துள்ளது.

கடந்த மாதம் 17ஆம் திகதி 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13ஆவது தொடர் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகிய நிலையில்.மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நொக்-அவுட் சுற்றுகளின் முடிவில் ஆசிய அணிகளான நடப்பு சம்பியன் இந்தியாவும் பங்களாதேஷும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியதன் போது, போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது.

இவ் போட்டியில் பங்களாதேஷ் அணியே நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றதால் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.அந்தவகையில் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் யஷாஸ்வி ஜைஸ்வால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர், ஒரு சிக்ஸர், எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மேலும், திலக் வர்மா 38 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். ஏனையோர் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.இதன்படி இந்திய அணி 47.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக, அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகளையும், ஷொரிபுல் இஸ்லாம் மற்றும் தன்ஸிம் ஹசன் சகிப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு ரஹிபுல் ஹசன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹொசைன் இமொன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
மேலும் தன்ஷிட் ஹசன் 17 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார். ஏனைய வீரர்கள் சோபிக்காத நிலையில் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் போட்டியின் இறுதி வேளையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டு பங்களாதேஷ் அணிக்கு 46 ஓவர்களில் 170 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து பங்களாதேஷ் அணி 42.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றியிலக்கை அடைந்ததன்மூலம் 3 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றியை சூடியது.

இவ் போட்டியில் அணித்தலைவர் அக்பர் அலி ஆட்டமிழக்காமல் ஒரு சிக்ஸர் 4 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் ரகிபுல் ஹசன் ஆட்டமிழக்காமல் 9 ஓட்டங்களுடன் களத்தில் நின்றனர்.இவ் போட்டியின் ஆட்டநாயகனாக நீதான ஆட்டத்தை இறுதி நேரத்தில் வெளிப்படுத்தி போட்டியை வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்ற அணித்தலைவர் அக்பர் அலி தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

You can share this post!

Recent Post