• Last Update
  • 29℃ Canada

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் – ஆண்டின் சிறந்த வீர, வீராங்கனைகளுக்கான கௌரவம்

அவுஸ்ரேலியா கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகின்றது.

இதேபோல் 2019 இல் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நேற்று முன்தினம் விருதுகள் வழங்கப்பட்டன.சர்வதேச கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் ஊடகங்கள் வாக்களித்ததன் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

முக்கிய விருதாக கருதப்படும் முன்னாள் வீரர் ‘ஆலன் போர்டர்’ விருதை கடும் போட்டியின் மத்தியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் வென்றார்.இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் 647 ஓட்டங்கள் குவித்தார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 335 ஓட்டங்கள் குவித்தார். இவ்வாறான முக்கிய பெறுபேறுகளே அவரை விருது பெறவைத்தது.ஆஷஸ் தொடரில் தொடர் சதங்களால் அசத்திய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தனது வேகப்பந்துவீச்சால் அணிக்கு எப்போதும் பலம் சேர்க்கும் பட் கம்மிங்ஸ் ஆகியோர் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன.

மேலும், பெண்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் பெலிண்டா கிளார்க் விருதை எலிஸ் பெர்ரி வென்றார். ஜெஸ் ஜொனாசென், அலிஸா கீலி ஆகியோரும் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள்.சிறந்த டெஸ்ட் வீரர் விருதை ஆஷஸ் தொடரில் அசத்திய மற்றுமொரு இடைநிலை வீரரான மார்னஸ் லபுஸ்சேன் வென்றார்.சிறந்த ஒருநாள் வீரர் விருதை, அவுஸ்ரேலிய ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளின் தலைவரான ஆரோன் பிஞ்ச் தன் வசப்படுத்தினார்.சிறந்த ரி-20 வீரர் விருது, ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வென்ற டேவிட் வோர்னர் வசம் சென்றது.

சிறந்த ஒருநாள் மற்றும் ரி-20 வீராங்கனைக்கான விருதை அவுஸ்ரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் அலிஸா கீலி வென்றார். இவர் அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.அவுஸ்ரேலியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான் பிரட்மனின் பெயரால் வழங்கப்படும் இளம் வீரர் விருதை வலது கை வேகப்பந்து வீச்சாளர் வெஸ் அகர் பெற்றுக் கொண்டார்.முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை கௌரவத்திற்குரிய பெற்றி வில்சன் பெயரில் வழங்கப்படும் இளம் கிரிக்கெட் வீராங்களை விருதை டெய்லா விளாமின்க் பெற்றுக் கொண்டார்.

 

You can share this post!

Recent Post