அமேசான் காடுகள் தொடர்பில் அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வு

282

காடுகளை அழிப்பது மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் அமேசான் மழைக்காடுகளின் கார்பனை உறிந்து கொள்ளும் திறன் மாற்றமடைந்து வருவதாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளின் பல பகுதிகள், கார்பனை உள்வாங்கிக் கொள்வதை விட, கார்பனை வெளியிடுவது அதிகரித்து இருக்கிறது.

கணிசமான அளவில் மரங்கள் வெட்டப்படுவது போன்ற காடழிப்பு நடவடிக்கைகள் மற்றும் காட்டுத் தீ போன்ற பிரச்னைகளால் அமேசான் காடுகளின் தென்கிழக்குப் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கோடை காலத்தில், அப்பகுதிகளில் நிலவும் தட்ப வெப்ப நிலை உலக சாரசரியை விட சுமார் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

பூமியின் சில பகுதிகள், கார்பனை வெளியிடும் அளவை விட வளிமண்டலத்தில் இருந்து அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்கள், கார்பன் வாயுக்களை உள்வாங்கிக் கொள்ளும். இதை ஆங்கிலத்தில் Carbon Sink என்பார்கள்.

உலகின் பருவநிலை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில், கார்பனை உள்வாங்கிக் கொள்ளும் பூமியின் நிலப்பகுதிகள் மற்றும் காடுகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

காடு எரிப்பு மாதிரிப் படம்

கடந்த 1960-களில் இருந்து இது போன்ற கார்பன் சிங்க்-கள், மரபுசார் எரிபொருளின் 25 சதவீத கார்பன் உமிழ்வை உள்வாங்கிக் கொண்டன.

உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளைக் கொண்ட அமேசான், இதில் மிக முக்கிய பங்கு வகித்தது.

பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் வனங்களை அழிப்பது போன்றவை, கார்பனை உறிஞ்சும் இந்த பஞ்சு போன்ற அமைப்பின் மீது பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

2010 – 2019 வரையான காலத்தில், பிரேசிலின் மழைக்காடுகள் உள்வாங்கிக் கொண்ட கார்பனை விட, 20 சதவீதம் அதிக கார்பனை வளிமண்டலத்தில் வெளியிட்டுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஓர் ஆய்வு கூறுகிறது.

2010 – 2018 வரையான காலகட்டத்தில் மழைக்காடுகளில் ஒரு பகுதி மட்டும் தொடர்ந்து அதிக கார்பனை வெளியிடுவதாக சுட்டிக் காட்டி இருக்கிறது.

பூமியின் ஒரு பகுதி உள்வாங்கிக் கொள்ளும் கார்பனை விட வெளியிடும் கார்பன் அதிகமாக இருந்தால், அதை கார்பன் உமிழும் பகுதி என்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளில் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, மழைக்காடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் மீது, விமானத்தைப் பயன்படுத்தி சுமார் 600 முறை காற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

காடுகள் மாதிரிப் படம்

மழைக்காடுகளின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தெளிவான வேறுபாடுகள் இருப்பதை இவ்வாய்வு கண்டுபிடித்திருக்கிறது.

“அமேசான் காடுகளில் கிழக்குப் பகுதி சுமார் 30 சதவீதம் அழிக்கப்பட்டு இருக்கிறது. இப்பகுதி மேற்கு பகுதியை விட சுமார் 10 மடங்கு அதிக கார்பனை வெளியிட்டு இருக்கிறது. அமேசானின் மேற்குப் பகுதி 11 சதவீதம் மட்டுமே அழிக்கப்பட்டு இருக்கிறது” என்கிறார் இந்த ஆராய்ச்சி குறித்து எழுதிய முதன்மை ஆசிரியர் லுசியானா கட்டி.

“இது நேரடியாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் வளிமண்டலத்தில் அதிக கார்பனை வெளியிடுவதால் பருவநிலை மாற்றத்தின் வேகம் அதிகரிக்கும். அதோடு வறட்சியான கால கட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. மரங்களை அதிகமாக கார்பனை உமிழச் செய்யும்”

“இது மிகவும் மோசமான எதிர்மறையான பின்னூட்டம். இது நாம் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகமான கார்பன் உமிழ்வை அதிகரிக்கும்” என்கிறார்.

தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் அமேசான் காடுகள் மிக மோசமாக காடழிப்பு நடவடிக்கைகளாலும், பருவநிலை மாற்ற பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மிக வெப்பமான இரு மாதங்களில் இப்பகுதியின் வெப்ப நிலை 3.07 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

காடுகள் மாதிரிப் படம்

இந்த பருவநிலை மாற்றம், மழை பொழிவை பாதிப்பதைக் குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது பிரேசில் மீது உடனடியாக தன் தாக்கத்தை வெளிப்படுத்தும் எனவும் எச்சரித்து இருக்கிறார்கள்.

“இது அனைவருக்குமே கெட்ட செய்திதான், குறிப்பாக பிரேசிலுக்கும்” எனிறார் லூசியானா.

“வளிமண்டலத்தில் போதுமான ஈரப் பதம் இல்லாததால் ஏகப்பட்ட பிரச்னைகள் உண்டாகின்றன. உதாரணமாக நீர் மின்சாரத்தின் விலை அதிகரிப்பது, விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம் போன்றவைகள்.”

“நாம் இதை அமேசான் காடுகளை அழிப்பதோடு இணைத்து, நம் நடவடிக்கைகளை மாற்ற வேண்டும்”

“அமேசான் காடுகள் தற்போது கார்பன் உமிழும் பகுதியாக மாறிவிட்டதா அல்லது கார்பனை உமிழக் கூடிய ஒரு பெரிய தோற்றுவாயாக மாறப்போகிறதா என்கிற கேள்விக்கான விடை இல்லை” என்கிறார் வேர்ல்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிட்யூட் என்கிற அமைப்பைச் சேர்ந்த நான்சி ஹாரிஸ்.

“அமேசான் காடுகள் சிக்கலில் இருக்கின்றன என்பதில் அறிவியல் தெளிவாக இருக்கிறது. காடழிப்பால் ஏற்படும் அதிக கார்பன் உமிழ்வு தொடர்ந்து அப்பகுதியை பல தசாப்தங்களாக பாதித்து வருகிறது. பருவ நிலை மாற்றம் காடுகளில் ஏற்படும் வறட்சி, காட்டுத் தீ போன்ற தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவே செய்யும்” என்கிறார் நான்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: