வாதங்களால் இந் நாட்டின் பொருளாதாரம் வளரப் போவதில்லை- எம்.எம்.மஹ்தி

145

தொடராக பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்து வருகின்ற நம் நாட்டின் பொருளாதாரத்தை சகவாழ்வின் மூலம் கட்டியெழுப்ப அனைவரும் தயாராக வேண்டும் என கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

மூன்று தசாப்தகால யுத்தத்தில் எமது நாட்டின் சொத்துக்கள் வீணாக அழிக்கப்பட்டன. தேசிய வருமானத்தின் பெரும்பங்கை ஆளணிகளுக்கும் யுத்த தளபாடங்களுக்கும் செலவு செய்துள்ளோம். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் புனர்வாழ்வக்காகவும் கட்டுமானத்திற்காகவும பெருந்தொகை பணம் செலவு செய்யப்பட்டன.

இறுதியாக நம் சொத்துக்களை நாமே அழித்து விட்டு நமது வருமானத்திலேயே மீண்டும் கட்டுமானம் செய்கின்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. பல்லாயிரம் உயிர்களை பரிகொடுத்தோம். இன்னும் பல்லாயிரக் கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர். எந்த ஒரு பிரயோசனத்தையும் நாம் அடைய வில்லை.

பல்சமூகம் பல்லினம் வாழுகின்ற இந்நாட்டில் சகவாழ்வையும், புரிந்துணர்வையும் பலப்படுத்தி அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முயற்சிக்க வேண்டிய தருணத்தில் சுயநல அரசியலுக்காக இன்னும் பிரிவினைகளையும், இனவாதம், மதவாதம் இனக்குரோதங்களையும்,இன அடக்குமுறையையும் கையிலெடுத்து அரசியல் செய்யும் வங்குரோத்து அரசியல் வாதிகளோடு ஊழல்வாதிகளையுமே தங்கள் தலைவர்களாக தேர்வு செய்யும் மக்களை எண்ணி மிகவும் கவலையடைகிறேன்.

இந்த நவீன காலத்தில் ஒவ்வொரு நாடும் தங்களது உள்ளூர் உற்பத்திகளை எப்படி அதிகரிக்கலாம், என்ன தொழிற்சாலைகளை அமைக்கலாம், எப்படியான புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தலாம், டிஜிடல் உலகத்தை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என்று சிந்திக்கின்ற போது இன்னும் மத்திய வங்கி பிணை முறி மோசடி, சீனிக் கொள்ளை, அந்த ஆணைக்குழு இந்த ஆணைக்குழு தெரிவுக்குழு என்று பாராளுமன்றத்தில் வாதப்பிரதி வாதம் அடிபிடி, யுத்தம் செய்வதையும் ஒரு இனம் இன்னொரு இனத்தை பழிவாங்குவதையுமே காணக்கூடியதாக இருப்பது மிகவும் கவலையானது.

எனவே எதிர்கால சமூதாயத்திற்கு வளமான ஒரு இலங்கையை கையளிக்க வேண்டும். சகவாழ்வு, இன நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்திகள் அதிகரிக்கப் படவேண்டும். புதிய விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகளை பயன்படுத்த வேண்டும். சவாலான உலகத்தை எதிர்கொள்ளக் கூடிய சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

அதற்கான வேலைத்திட்டங்களை நன்கு திட்டமிட்டு நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் தயாராகின்ற போது கைகோர்த்து ஒத்துழைக்க முஸ்லீம் சமூகமும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: