ஜோ பைடன்-சிங்களப் பத்திரிகைகளின் கற்பனை; அற்பசொற்ப ஆதரவையும் இழக்கப்போகும் தமிழர்கள்!வேடிக்கை பார்க்கும் தமிழ்க் கட்சிகள்

714

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கர்களையும் ஆசிய நாட்டவர்களையும் முக்கியமான பதவிகளுக்கு நியமிப்பதாகச் சிங்கள – ஆங்கில பத்திரிகைகள், மிகைப்படுத்திச் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் பிரசுரித்து வருகின்றன. உப ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள தமிழ்நாடு மன்னார்குடி துளேசிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமால ஹரிஸ், புலம்பெயர் தமிழர்களுடன் நெருங்கிய உறவை வைத்திருப்பதாகவும், ஈழத்தமிழர்கள் சிலர் அவருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடி வருவதாவும் எச்எல்டி மகிந்தபால என்ற சிங்கள அரசியல் விமர்சகர், சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.

வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் சுயாட்சி அதிகாரம் உள்ள அரசியல் தீர்வுக்கு அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் எனவும் ஈழத்தமிழ் மக்களின் சார்பில் ஜோ பைடன் நிர்வாகம் செயற்படக்கூடிய ஆபத்துள்ளதென்ற தொனியில், மகிந்தபாலவின் கட்டுரை அமைந்துள்ளது. சிங்கள மக்களுக்கும் பௌத்த குருமாருக்கும் தமிழ் மக்கள் மீதான இனவெறியையும் கோபத்தைத் தூண்டும் வகையிலும் அந்தக் கட்டுரையின் கருத்து அமைந்துள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரை கமலா ஹரிஸ், தனது பிரதான ஆலோசகராகவும் அவருடைய அலுவலகத்தில் முக்கிய பொறுப்புள்ள அதிகாரியாகவும் நியமித்துள்ளதாக ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவான சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது பதவி வகித்திருந்த சூசன் றைஸ் என்ற அமெரிக்க மூத்த இராஜதந்திரியொருவர் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர், புலம்பெயர் தமிழர்களோடு நெருங்கிய உறவு கொண்டவரெனவும் திவயின என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவி செய்தவர் என்றும் அந்தப் பத்திரிகை மேலும் புதிய தகவலை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இதேவேளை, இந்தியப் பூர்வீகத்தையுடை அமெரிக்கர்களான 20பேர், ஜோ பைடன் நிர்வாகத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கவுள்ளனர் எனவும், அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் நெருங்கிய ஈடுபாடுடையவர்கள் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் பிரதான இலரத்திரனியல் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டார் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள – ஆங்கிலப் பத்திரிகைகள், ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கவுள்ளதாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து டொனால்ட் ட்ரம்பினால் வெளியேற்றப்பட்ட அமெரிக்கா, ஜோ பைடன் நிர்வாகத்தில் மீண்டும் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மிறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை நடத்தும் என்ற தொனியில் சிங்களப் பத்திரிகைகள் கற்பனைச் செய்திகளை வெளியிடுகின்றன.

ஆனால் சிங்களப் பத்திரிகைகளின் இவ்வாறன கற்பனைக் கதைகளினால், தமிழ் மக்களுக்கு வரக்கூடிய அற்சொற்ப நன்மைகளும் இல்லாமல் போவதற்கான வாய்புகளே அதிகம் என்று கொழும்பில் உள்ள அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்

அமெரிக்க நிர்வாகத்தைப் பொறுத்தவரை கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்களின் (American structure (System)) பரிந்துரைகள் மற்றும் ஏற்கனவே எழுதப்பட்ட கொள்கைள் அடிப்படையிலேயே செயற்படும் என்பது கண்கூடு.

1997ஆம் ஆண்டு அமெரிக்கா, புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடைகூட அந்த அடிப்படையிலேயே இடம்பெற்றன. இந்தோ- பசுபிக் நலன்சார்ந்தே அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் முடிவுகளை எடுத்தும் வந்திருந்தது. இந்தியாவைக் கேட்டே அமெரிக்கா ஈழத்தமிழர் விவகாரத்தில் செயற்பட்டும் வருகின்றது. இந்திய உயரதிகாரிகளும் ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்களும் அல்ல.

இவ்வாறானதொரு நிலையில் ஊதிப்பெருக்கும் சிங்கள ஊடகங்களின் கற்பனைக் கதைகளினால், சாதாரண சிங்கள மக்களும் பௌத்த குருமாரும் அச்சமடைந்து அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளே உள்ளன. இதனால் அமெரிக்கா மேலும் இலங்கையோடு இறங்கி வந்து, “நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல” என்பதை நிரூபிக்கக் கூடிய நிலைமை வரலாம். ஏனெனில் இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் விடங்களில் இலங்கையின் ஒத்துழைப்பு அமெரிக்காவுக்கு அவசியமாகும்.

இந்திய- இலங்கை அரசுகளைக் கடந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் தலையிட்டு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதொரு அவசியம் அமெரிக்காவுக்கு இல்லவேயில்லை. அமெரிக்கா தலையிடக் கூடிய முறையில், பூகோள அரசியல் நிலமைகளை அவதானித்துக் காய்களை நகர்த்தும் அரசியல் ஈடுபாடுகள் எதிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனம் செலுத்தவுமில்லை. எதிர்காலத்திலும் அப்டியொரு சிந்தனை தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வருமா என்றால், அதற்கான சமிக்ஞைகள் கூட இல்லை.

இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா என்ற கட்டுக்கதைகளை சிங்களப் பத்திரிகைகள் அவுட்டுவிடுவதால், தேவையற்ற பீதி சர்வதேச அரசங்கில் உருவாகி, இந்தியாவும் உசாரடைந்து இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தையும் ரத்துச் செய்யும் நிலைதான் வரும்.

இப்படித்தான் 2005ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற காலம் வரை புலிகளிகளின் ஆயுத வளர்ச்சி, மற்றும் சர்வதேச வலைப்பின்னல் அது இது என்று கற்பனையில் ஊதிப் பெருக்கிச் சிங்களப் பதிரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனால் அச்சமடைந்த பௌத்தகுருமார் அரசாங்கத்துக்குப் பயங்காட்டி, உசுப்பேத்தி மிகப் பெரிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, அமெரிக்கா- இந்தியா என்று சர்வதேசப் படைகளின் ஒத்துழைப்புகளுடன் இறுதிப் போரை நடத்தி ஆயுதப் போராட்டத்தை முற்றாகவே அழித்தனர்.

“இறுதிப் போரை நடத்தியது மகிந்த ராஜபக்ச அல்ல பௌத்த குருமாரும் சிங்களப் பத்திரிகைகளுமே” என்று பிரபல சிங்கள ஊடகவியலாளர் ஞானசிறி கொத்திகொட 2012ஆம் ஆண்டு கொழும்பு இதழியல் கல்லூரியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இப்போது ஈழத்தமிழர் குறித்து அரசியல் ரீதியாகச் சர்வதேசமட்டத்தில் இருக்கக் கூடிய கொஞ்ச நெஞ்ச அனுதாபங்களைக்கூட இல்லாமல் செய்து, அடியோடு முற்றாகவே அழித்துவிடுகின்ற போக்கிலேதான் சிங்களப் பத்திரிகைகள் முனைப்புக்காட்டுகின்றன.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடக்கின்ற இந்த அநியாங்களையெல்லாம் அறிந்துகொள்ளாமல் அல்லது தெரிந்தும் தெரியாததுபோன்று தமிழ்த்தேசியக் கட்சிகள் தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்துகின்றன என்பதுதான் இங்கே வேடிக்கை.

தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் இலங்கைப் பாராளுமன்ற அரசியலில் இருந்து வெளியே வந்து, ஒரு தேசமாகச் செயற்பட்டால், நிச்சயமாகத் தற்போதுள்ள பூகோள அரசியல் குறிப்பாக இந்தோ- பசுபிப் பிராந்திய அரசியல் கொதிநிலையைப் பயன்படுத்தி, ஈழத்தமிழர் பக்கம் கவனத்தைத் திசை திருப்பக் கூடிய காய்களை நகர்த்த வாய்ப்புண்டு.

இலங்கையைத் தங்கள் பக்கம் வைத்திருபதற்கானவொரு ஆயுதமாக மாத்திரமே தமிழர் விவகாரத்தைக் கையிலெடுத்து ஆனால் தமிழர்களுக்கு எதனையுமே செய்யாமல், இந்தோ- பசுபிக் பாதுகாப்பு நலனில் கவனம் செலுத்த முற்படும் அமொிக்க- இந்திய அரசுகளை ஈழத்தமிழர் பக்கம் திரும்பவைக்க வேண்டுமானால், தமிழர்கள் ஒருதேசமாக சிந்திக்கச் வேண்டும்.