ஏழை எளிய நோயாளிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில், அம்மா உணவகத்தை சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனையில் ஏற்படுத்திய டாக்டர் சாந்தா அவர்கள், சென்னை மயிலாப்பூரில், 11.03.1927 ஆம் ஆண்டில் பிறந்தார்.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் அவர்கள், டாக்டர் சாந்தா அவர்களின் தாத்தாவின் சகோதரர் ஆவார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் அவர்கள், டாக்டர் சாந்தா அவர்களின் தாய்மாமா ஆவார்.
டாக்டர் சாந்தா அவர்கள், சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும், 1949ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டமும், 1955ஆம் ஆண்டில் சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரியில் பி.ஜி.ஓ பட்டமும், எம்.டி. பட்டமும் பெற்றார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால் துவங்கப்பட்ட, விமன்ஸ் இந்தியன் அசோஸியேஷன் மூலம், கேன்சர் ரிலீஃப் பண்ட் வாயிலாக நிதி திரட்டி, புற்றுநோயாளிகளுக்காக குறிப்பாக, ஏழை எளிய நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை அடையாற்றில் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பணியிலிருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க பணியை கைவிட்டுவிட்டு, சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அடையாறு புற்றுநோய் மையத்தில்,1955 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த டாக்டர் சாந்தா, பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர் டாக்டர் சாந்தா. பனிரெண்டு படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை, தனது குரு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து, அடையாறு புற்றுநோய் மையத்தை உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றினார்.
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குப் பிறகு, 1984ஆம் ஆண்டில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் டாக்டர் சாந்தா.புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகள எழுதிய டாக்டர் சாந்தா, புற்றுநோய் சம்பந்தமான விரிவுரைகளை, பக்கம் பக்கமாக தன் கையால் சளைக்காமல் எழுதியவர்.
மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட உலகளாவிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ள டாக்டர் சாந்தா, விருதுகள் மூலம் கிடைக்கும் பெரும் தொகை முழுவதையும், தான் சேவையாற்றிய புற்றுநோய் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர், இந்திய வேளாண் ஆய்வுக்கழக உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல முக்கிய பதவிகளில் திறம்பட செயல்பட்டார்.
உலகில் எங்கே புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உடனே அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டியவர் டாக்டர் சாந்தா, எளிமையும் பணிவும் தன்னகத்தே கொண்டு, புற்றுநோயாளிகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் இரவு பகல் பாராமல் உழைத்தும், புற்றுநோய்த் துறையில், பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
டாக்டர் சாந்தா அவர்களின் ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை அகற்ற, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் தமது தொண்ணூற்றி நான்காம் வயதில், இயற்கை எய்தினார்.
புற்றுநோய் மருத்துவத் துறைக்காகவும், புற்றுநோயாளிகளுக்காகவும் தன் வாழ்நாளையே அர்பணித்த டாக்டர் சாந்தா அவர்கள், கோடிக்கணக்கான புற்றுநோயாளிகளின், ஏழை எளிய மக்களின் உயிரைக் காப்பாற்றியவர்.டாக்டர் சாந்தா அவர்களின் ஈடு இணையில்லா புகழ், இவ்வையகம் உள்ளலவும் நிலைத்திருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
பிற செய்திகள்:
- யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிப்பு- மக்கள் அனைவருக்கும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
- மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை; சம்மாந்துறையில் பதற்றம்..!
- மக்களுக்கு மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!
- ராஜபக்ச குடும்பத்திலும் ஊடுருவிய கொரோனா-உண்மை என்ன?
- கஞ்சா பயிரிட அனுமதி வேண்டும், புத்த பெருமானே கஞ்சாவை ஏற்றுக் கொண்டார்; பெங்கமுவே நாலக்க தேரர்..!
- மகள் சுக்ராவுக்கு அன்போடு எழுதுவது-பௌத்த தேரரின் உருக்கமான கடிதம்!
- மகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக மரணம்
- மூன்று வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி!
- பிரித்தானியாவில் மேலும் அதிகரிக்கப்பட்ட தடைகள்-மக்கள் பேரவலம்
- ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்-கடவுள் மாதிரி வந்த மாற்றுத்திறனாளி; சினிமாவை விஞ்சிய சம்பவம்..!
- தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு.
- வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னறிவிப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்