ஈஸ்டர் தாக்குதல்-கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்..!

245

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போதைய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிக்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

நீதிக்கான பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் மேல் மாாகண சபை உறுப்பினர் நிரோஷா அத்துகோரள கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுடன் இருந்து உயிர்தப்பிய சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை அழைத்து வருவதற்கான எந்தவொரு முயற்சியையும் கோட்டா-மஹிந்த அரசாங்கம் எடுக்காததினால் இந்த அரசாங்கம் மீது பாரிய சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை நடத்தாமலிருக்கும்படி தடுக்க முடியாமலிருந்தவர்கள் யார் என்பதை முழுநாடுமே அறியும். ஆனால் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்பதே இன்னும் மர்மமாக இருக்கின்றது.

இந்த சம்பவத்திற்குப் பின் அரசியல் இலாபத்தைப் பெற்றவர்கள் குறித்தும் உண்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும். சஹ்ரான் உள்ளிட்டவர்களின் விடயங்கள் இதுவரை அறிக்கையில் அம்பலப்படுத்தப்படவில்லை.

அப்போதிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் சஹ்ரான் என்பவர் புலனாய்வுப் பிரிவுக்கு பல தகவல்களை அளித்துவந்தவர்.

அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது? சஹ்ரானுக்கு அப்போது சம்பளம் அளிக்கப்பட்டதை தற்போதைய அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருந்தது. அந்த வகையில், ஆணைக்குழு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவில்லை. அதேபோல ஈஸ்டர் தாக்குதல் குழுவில் இருந்து தப்பித்த சாரா ஜாஸ்மின் இன்னும் உயிருடன் இருக்கின்றார்.

மேலும் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற விதம் என்ன? இதுகுறித்து இந்தியாவிடம் இருந்து சாராவை இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளதா? இதுவரை இல்லை. இந்தியாவிலிருந்து இரண்டு உயரதிகாரிகள் இலங்கைக்கு வந்துசென்றனர். ஆனால் அவர்பற்றிய தகவல் இதுவரை கோரவில்லை. சாரா ஜாஸ்மினிடம் பல தகவல்கள் இருப்பதாக அவரது தாயாரே கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: