பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவு வாழ்க்கை வாழும் நித்தியானந்தா கடந்த வருடம் திடீரென கைலாசா எனும் இந்து நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார்.
தொடர்ந்து கைலாசா நாட்டுக்கென நாணயம், முத்திரை, கடவுச்சீட்டு, விமானம், இணையதளம் என புதிது புதிதாக உருவாக்கி அதனை சமூகவலைத்தளங்களில் உலாவிட்டு பலரை ஆச்சரியத்துக்குள் இட்டுச்சென்றார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தியும் தன்னை பல்வேறு தெய்வங்களாக அலங்கரித்து வீடியோ காட்சிகளை உருவாக்கி அதனை வெளியிட்டு வருகின்றார்
இவ்வாறாக நாளுக்கு நாள் வெளியாகும் வீடியோக்களை பல நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் நித்தியானந்தா கண்களை மூடி தூங்கிய புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டார்.
அதனை பார்த்த நெட்டிசன்கள் நித்தியானந்தா உயிரிழந்து விட்டார் என சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலா வரத் தொடங்கின.
இந்நிலையில் அது தொடர்பில் விளக்கமளித்த நித்தியானந்தா,
“நான் சமாதியில் இருக்கிறேன். எனது வெறுப்பாளர்கள் நான் இறந்துவிட்டதாக பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் உயிரிழக்கவில்லை. வேறு எங்கும் செல்லவில்லை. பேசுவதற்கும், சத்சங்களை வழங்குவதற்கும் இப்போதைக்கு இயலாது. அதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நேரம் எடுக்கும்.
என்னை சுற்றியுள்ள மக்கள், பெயர்கள், அவர்களின் இருப்பிடம் பற்றிய நினைவுகளை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. கைலாசத்தின் அதிர்வலைகள் என மனநிலையில் இன்னும் உள்ளது. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் போலி என சந்தேகிப்பவர்கள் திருவண்ணாமலை அருணகிரி யோகேஷ்வர சமாதிக்கு சென்று விளக்கு ஏற்றினால் என்னை நீங்கள் தெளிவாக காணலாம்.
என் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மருத்துவ கவனிப்பிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. 27 மருத்துவர்கள் என உடல்நிலையை கண்காணித்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் மருத்துவர்கள் என கூறுவதை காட்டிலும் எனது சீடர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அழைத்தால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் என்னுடன் இணைந்து மனித உடல் மற்றும் மனதில் உள்ளுணர்வை தாக்கம் பற்றி அறிந்துகொள்வதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.
நாள்தோறும் எனது நித்ய சிவ பூஜை மட்டும் தவறாமல் நடைபெறுகிறது. சாப்பிடுவதும், தூங்குவதும் இன்னும் தொடங்கப்படவில்லை. நித்ய பூஜைக்காக நான் சமாதியில் குடியேறும்போது உங்களது கருத்துகளை பார்த்து அதற்கு உரிய பதிலை அளிக்கிறேன். நான் நலம் பெற வேண்டும் என விரும்பும் அனைத்து பக்தர்களுக்கும் எனது நன்றிகள்.
எனது உடலில் எந்த நோயும் இல்லை. இது உடலில் வழியாக செயல்படும் காஸ்மோஸ் (மருத்துவர்களால் உடலில் எந்த நோய் அல்லது கோளாறு ) போன்றது. பரமசிவனுக்கு இணையான பிரபஞ்சத்தை அனுபவித்து வருகிறேன். மனிதனாக இருப்பதை விட கைலாசத்தில் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். தேவைப்பட்டால் நிகழ் உலகத்துக்கு நான் மீண்டும் வருவேன். நான் மீண்டும் மனிதனாக வருகை புரிந்து உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற உணரச் செய்த உங்களது அன்புக்கு நன்றிகள்.”என பதிலளித்துள்ளார்.