நான் மதுபோதையில் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை அச்சுறுத்தவில்லை -லொஹான் ரத்வத்த

143

மது போதையில் அனுராதபுரம் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை மிரட்டியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் தான் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்ததாக அமைச்சர் ஒப்புக்கொண்ட போதிலும், அவர் மது போதையில் இருந்ததாகவும் மற்றும் கைதிகளுக்கு துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகின்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறியதாவது,

நான் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றேன் என்பதை ஒப்புக்கொள்வேன். எந்த நேரத்திலும் சிறைச்சாலையினை பார்வையிடுவதற்கு அமைச்சருக்கு உரிமை உண்டு. அதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பகல் வேளையிலும் சரி இரவு வேளையிலும் சரி எந்த நேரத்திலும் சிறைச்சாலைக்கு செல்ல முடியும்.

எனது கட்டுப்பாட்டின் கீழ் இருபத்தி ஒன்பது சிறைச்சாலைகளும் 2 புனர்வாழ்வு முகாம்களும் உள்ளன. மேலும் இதில் உள்ளே என்ன நடக்கிறது என்பதனை பார்ப்பதற்கு எந்த நேரத்திலும் என்னால் உள்நுழைய முடியும்.

ஆனால் நான் உள்ளே குடித்து விட்டுச் செல்லவும் செல்லவில்லை அங்கே சென்று துப்பாக்கி முனையில் வைத்து எந்தக் கைதியையும் அச்சுறுத்தவும் இல்லை. அவ்வாறு செய்வதற்கு எனக்கு பைத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

நான் சிறைச்சாலையை பொறுப்பேற்கும் போது அங்கே நிறைய பிரச்சினைகள் காணப்பட்டன. எல்லா பிரச்சினைகளையும் நான் நிறுத்தினேன். உள்ளே நடைபெறுகின்ற போதைப் பொருள் கடத்தலை நிறுத்தினேன். தீவிரத் தன்மை கொண்ட கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றினேன். சிறைச்சாலை உள்ளே தொலைபேசியின் மூலமாக நடக்கின்ற குற்றங்களை இல்லாமல் செய்தேன். பாதுகாப்பு குறித்து சில விடயங்களை கூற முடியாது

மேலும் சென்ற வாரம் நான் சிறைச்சாலைக்கு சென்றேன் தான் ஆனால் எந்த ஒரு கைதியையும் நான் மிரட்டவில்லை. நான் பார்வையிடுவதற்காக மட்டுமே அங்கு சென்றேன். உள்ளே நடைபெற்ற பல குற்றங்களை நிறுத்தியதால் தான் என் மீது இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்.

அத்தோடு நான் பெண்களோடு சிறைச்சாலைக்கு சென்றதாக கூறப்படும் செய்தியும் தவறு. இது அனைத்தையும் நான் ஜனாதிபதி முன்னிலையிலும் பிரதமர் முன்னிலையிலும் எடுத்துக் கூறுவேன் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: