இந்தோ-பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றியது ஏன்?மிலேனியம் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்! சீன உறவு என்னாகும்?

372

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சமீபகாலமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளதை ஜோ பைடன் தெரிவிக்கும் கருத்துகள் கட்டியம் கூறுகின்றன.

இந்த இடத்திலேதான் இலங்கையுடனான அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் (Millennium Challenge Cooperation) ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது குறித்து ஜோ பைடன் சாத்தியமான சமிக்ஞைகளை இலங்கைக்கு வெளிப்படுத்தக் கூடும்.

சீனா இலங்கையைக் கடன் பொறிக்குள் தள்ளுகிறது என்று குற்றம் சுமத்தாமல் அமெரிக்கா இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோவிடம் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச முன்வைத்த யோசனைகளை ஜோ பைடன் பரிசீலிக்கக் கூடிய வாய்ப்புகளே அதிகமாகவுள்ளன. கடந்த மாதம் கொழும்பில் நடந்த சந்திப்பின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் அமெரிக்க முதலீடுகள் இலங்கையில் அதிகரிக்கப்பட வேண்டுமென எழுத்துமூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்துவதற்கு எவ்விதமான திட்டங்களும் இல்லாமல் இறக்குமதிப் பொருளாதாரத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி உற்பத்திகளை முன்னேற்றுவதற்குப் பதிலாக இறக்குமதி உற்பத்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தேசிய கைத்தொழில்கள், உற்பத்திகள் அனைத்தும் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பலவீனங்களின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) நூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்கத் தாமாகவே முன்வந்தது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இது குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பௌத்த குருமாரின் எதிர்ப்புகளையடுத்து இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சத்திடுவதை மைத்திரி அப்போது  தாமதித்திருந்தார். கோட்டாபய ராஜபக்சவும் அவ்வாறான எதிர்ப்புகளினால் பின்வாங்கினாலும், தற்போது அந்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டு இலங்கையைக் கடன் பொறிக்குள் இருந்து மீட்கவே விரும்புகிறார் என்பதை அவருடைய சமீபகால நகர்வுகள் கோடிகாட்டுகின்றன.

பராக் ஒப்பாமா ஜனாதிபதியாக இருந்தபோது இந்த ஒப்பந்தம் பற்றிப் பேசப்பட்டதால் ஜோ பைடன் நிர்வாகம் இலங்கையோடு அந்த ஒப்பந்தம் குறித்துப் பேச்சு நடத்தி கைச்சாத்திடக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. வேண்டுமானால் ஒப்பந்தத்தில் இலங்கையின் இறைமை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அமெரிக்கா செயற்படும் என்ற வாசகத்தைச் சேர்ப்பதற்கு ஜோ பைடன் நிர்வாகம் விட்டுக்கொடுக்கவும் கூடும். ஏனெனில் இலங்கை போன்ற சிறிய நாடுகளோடு விட்டுக்கொடுத்து அரவனைத்துச் செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜோ பைடன் கூறியிருக்கிறார். ஆகவே ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்ற நோக்கில், அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் நான்கு மில்லியன் டொலர்கள் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான எதிர்ப்பை பௌத்த குருமார் கைவிடக்கூடும்.

அதேவேளை, ஜோ பைடன் நிர்வாகத்தில் இலங்கையோடு குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுமென MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி சியேன் கெய்ன்குறஸ் (sean cairncross) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, வளரும் நாடுகளுக்கான வர்த்தகப் பொருட்கள் அந்தஸ்த்துப் பட்டியலில் இருந்து இந்தியாவை டொனால்ட் ட்ரம் கடந்த ஆண்டு நீக்கியிருந்தார். ஆனால் ஜோ பைடன் நிர்வாகம் அந்த நீக்கத்தை ரத்துச் செய்ய வேண்டுமென இந்திய வர்த்தக சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர வேண்டுமென இந்தியத் தொழிலதிபர்கள் ஜோ பைடனிடம் கோரியுள்ளனர். இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் விடங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் இந்தியா, அமெரிக்காவுடன் மேற்கொள்ளவுள்ள வர்த்தக ஒப்ப்ந்தத்தின் மூலமாக இலங்கையையும் தங்கள் பக்கம் வைத்திருக்கும் திட்டமொன்றை வகுத்துள்ளதாகவே  இந்தியத் தொழில் அதிபர்களின் இந்தக் கோரிக்கை எடுத்துக் காண்பிக்கின்றது.

வர்த்தக ரீதியான உறவுகளை வளர்த்துக்கொள்வதன் ஊடாகவே பூகோள அரசியல் நகர்வுகளைக் கையாள முடியுமென ஜோ பைடன் கூறியிருப்பது இந்தியாவுக்குச் சாதகமானது என்ற அடிப்படையில், அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தையும் கைச்சாத்திட இலங்கை விரும்பக்கூடும். ஏனெனில் குவாட் எனப்படும் அமெரிக்க இந்திய, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியக் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சித் திட்டத்தில் இலங்கையையும் இணைக்கும் பேச்சுக்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டுப் பயிற்சியில் இலங்கை இணையுமாக இருந்தால், சீனாவின் கடனுதவித் திட்டங்களில் இருந்து விடுபடுவதற்கான முதலீடுகள் மற்றும் நிதியுதவிகளை அமெரிக்கா கூடுதலகச் செய்யவதற்கான வாய்ப்புகள் உண்டெனலாம்.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஜோ பைடன் நிர்வாகம் புதுப்பிக்க வேண்டுமென இந்தியத் தொழிலதிபர்கள் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கூட இலங்கையைச் சீனாவிடம் இருந்து விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் அவதானிக்க முடியும். அத்துடன் ஜோ பைடனின் வெற்றியின் பின்னர் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் படை உயர் அதிகாரிகள் பங்குபற்றும் இணையவழி மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றுகின்றமை அதனை மேலும் நிரூபிக்கின்றது. இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் விடங்கள், பிராந்தியப் பாதுகாப்புகள் உள்ளிட்ட அரசியல், பொருளாதார ஒத்துழைப்புகள் பற்றி நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள மாநாட்டில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமையும் நடைபெற்று நாளை வியாழக்கிழமையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், கொழும்பிலுள்ள அமெரிக்க இந்திய, ஜப்பான் தூதுவர்கள், மூத்த இராஜதந்திரிகள், படை உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் எனப் பலரும் பங்குகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் இலங்கை பங்குபற்றியிருப்பது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை செயற்படாது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்த மாநாட்டில் இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆரம்ப உரையாற்றியிருக்கிறார்.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி பற்றியும் குறிப்பாக இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகளுடன் இணைந்து இலங்கை அந்தத் திட்டத்தை முன்னெடுக்குமெனவும் ஜெநாத் கொலம்பகே கூறியிருக்கிறார். ஆகவே இதன் பின்னணியில் நோக்குவதாக இருந்தால் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கைச்சாத்திடும் என்பதுடன் இலங்கையில் சீன ஆதிக்கம் குறையும் என்பதற்கான சமிக்ஞைகளும் தென்படும் எனலாம்.