Tuesday, June 28, 2022

இனவழிப்பு நினைவேந்தல் நாளில் கொடுங்கோலர்களின் ஆட்சி சொந்த மக்களாலேயே அடித்துத் வீழ்த்தப்படும் நிலை-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை!

விடுதலை வேட்கையுடன் மரித்துப்போன மண்ணுறங்கும் மாவீரர்கள் விடுதலையின் பால் கொண்ட பற்றுறுதியே இன்று சிங்களத்தை அல்லோலகல்லோலப் படுத்துகின்றது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய ஊழிக்கூத்தின் அழியா சாட்சியாக முள்ளிவாய்க்கால் இரத்த சரித்திரத்தின் 13வது ஆண்டை கடக்கும் நிலையில், ஈழத்தமிழர்களை இனவழிப்புச்செய்த ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கெதிராக சிங்கள மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர்.

13வது இனவழிப்பு நினைவேந்தல் நாளில் கொடுங்கோலர்களின் ஆட்சி அவர்களது சொந்த மக்களாலேயே அடித்துத் வீழ்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்திலிருந்து ஈழத்தமிழர்களை வஞ்சித்து செய்த இனவாத அரசியலின் விளைவே இன்றைய நிலைக்குக் காரணம்.

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியான வாழ்வும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியும்; கிட்டாது என்பது நிதர்சனமான உண்மை.

கொன்று பிணமாகவும், உயிருடனும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட 70.000ற்கு மேற்பட்ட எமது உறவுகளுக்கு கிடைக்கும் நீதியானது எமக்கானதாக மட்டுமன்றி அனைத்துலக மனிதநேயத்தின் மாண்பினை காப்பதாகவும் அமையும்.

ஏனென்றால், தமிழர் உடல்களுடன் அனைத்துலக மனிதநேயமும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆழப்புதைக்கப்பட்டுள்ளது. விடுதலை வேட்கையுடன் மரித்துப்போன மண்ணுறங்கும் மாவீரர்கள் விடுதலையின் பால் கொண்ட பற்றுறுதியே இன்று சிங்களத்தை அல்லோலகல்லோலப் படுத்துகின்றது.

தமிழர்களைத் துயிலுரிந்து மானபங்கப்படுத்தியவர்கள், இன்று தங்கள் சொந்த இனத்தாலேயே துயிலுரிந்து அடித்துக் கலைக்கப்படுகிறார்கள்.இன்று வரை 146,679 பேருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமலே 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒருபக்கம் எமக்கான நீதி தடுத்து தாமதப்படுத்தப்பட்டு வருகையில் மறுபக்கம் வேறு வடிவிலான இனவழிப்பு செயற்பாடுகளும் சிங்கள அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2009ல் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னரும் வடக்குக் கிழக்கில் 300.000 இராணுவத்தினர் குடிகொண்டுள்ளனர். இராணுவத்தளபதியும் இனவழிப்பாளனுமான சவேந்திர சில்வா எந்தத் தயக்கமும் இல்லாமல் வடக்கில் அமைக்கப்படும் பௌத்த விகாரையைப் பார்வையிட வந்து செல்கிறான்.

சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து பௌத்த சிந்தனைவாதத்திற்குள்ளும் மகாவம்ச மாயைக்குள்ளும்; வைத்துக்கொண்டு தமிழரையும் முசுலீம்களையும் நசுக்கி இனவாத அரசியல் மேற்கொண்டு வருகிறது சிங்களம். இன்றைய எதிர்ப்புகள் ராஜபக்சக்களோடு முடங்கிப் போகுமானால், எதிர்வரும் காலங்களில் மீண்டும் ராஜபக்சக்களோ அவர்களின் ஆதரவாளர்களோ ஆட்சிபீடமேறுவதற்கான சாத்தியமுண்டு.

சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பும் மகாவம்ச மனப்பாங்கும் மாறாமல் சிங்கள தேசத்தில் நீண்டகால மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.இலங்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் 2022 மார்ச் மாதத்தில் மட்டும் 30 வீதத்தால் அதிகரித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்துள்ள நாட்டின் வாழ்க்கைச் செலவை நாட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு மிக அகோரமாக அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக சனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி நாடு பூராவும் ஆயிரக்கணக்கானோர் அண்மையில் பாரிய ஆர்ப்பாட்டங்களில் வீதிகளில் இறங்கினர்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைத் தீவு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய அடிப்படைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது. இது அரசிற்கு ஒரு பாரிய நெருக்கடியாகும், 1948ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியாகும்.

இப்படியான பெரு நிதி நெருக்கடி பல காரணிகளால் ஏற்படுகிறது, தமிழ் மக்களுடனான சிங்களப் பேரினவாதிகளின் இன முரண்பாட்டு அரசியல் முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை