அல்-குர்ஆனை எதிர்காலங்களில் தடைசெய்வதற்குத் திட்டமா?இஸ்லாமிய அமைப்புகளின் தடையின் பின்னணியில் யார்?

217

பதினொரு இஸ்லாமிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதற்கான அனுமதியினை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் பெயர் தாங்கிய சிலர் ‘அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ்’ என்றும், இன்னும் சிலர் மகிழ்ச்சி தெரிவிக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இவ்வாறான தடைகளுக்கு அரசாங்கத்தினை மட்டும் நாங்கள் குறை கூற முடியாது. ஏனெனில் இதற்கு பின்னால் இயக்க வெறி பிடித்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் பலர் அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் வழங்கி வருகின்றனர். இது இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுகின்றது.

இந்த தடை அமுலுக்கு வந்தால், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர்களுக்கு மட்டுமல்ல, இஸ்லாமிய பிரச்சாரத்தினை மேற்கொள்கின்ற ஏனைய அமைப்பினர்களுக்கும் இடையூறுகள் ஏற்படும். குறிப்பாக எதிர்காலங்களில் அல்-குர்ஆனை தடைசெய்வதற்கான ஆரம்ப கட்டமாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பதினொரு அமைப்புக்களில் ‘சிலோன் தௌஹீத் ஜமாஅத்’ அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் மீது அடாவடித்தனங்கள், வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஜனாஸா எரிக்கப்பட்டபோதும், அதற்கு எதிராக முஸ்லிம் பிரதிநிதிகள் வாய்திறக்காமலும், ஒரு சிலர் சம்பிரதாயத்திற்காக பாராளுமனறத்தில் உரையாற்றிவிட்டும் இருந்த நிலையில், குறித்த சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினர்களே முதன்முதலில் வீதியில் இறங்கி போராடினார்கள்.

இவர்களது போராட்டத்தின் காரணமாக உறங்கிக்கொண்டிருந்த ஏனைய அரசியல் தலைவர்களையும் வீதிக்கு வரச்செய்ததுடன், அது சர்வதேசத்தின் காதுகளுக்கும் சென்றடைந்தது.

ஆனால் சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினர்கள் (ஊவுது) குழப்பக்காரர்கள் என்றும், அவர்கள் அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்றும் அவர்களது போராட்டத்தினை முஸ்லிம் பெயர்தாங்கிய சில கோழைகள் கொச்சைப்படுத்தினார்கள்.

அவ்வாறு இவர்கள் அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்றால், தடை செய்யப்படுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுமதி வழங்கியுள்ள இஸ்லாமிய அமைப்புக்களின் பட்டியலில் ஊவுது அமைப்பின் பெயரை ஏன் உள்ளடக்கபட வேண்டும் ?

மனதில் உள்ள குரோதம் காரணமாக பொய் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்பது இதிலிருந்து புரிகின்றது.

சமூக பிரச்சினைகள் வருகின்றபோது ஊவுது மட்டுமல்ல எவராக இருந்தாலும் அல்லது எந்த இஸ்லாமிய கொள்கையுடையவர்களாக இருந்தாலும், தொடை நடுங்கியவர்களாக மூலைக்குள் முடங்கிக் கிடக்காமல், துணிச்சலுடன் தனது சமூகத்திற்காக வீதியில் இறங்கி போராடியதற்காக சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற அனைவரும் இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் அவர்களை பாராட்டுவது வழமை.

ஆனால் சிலர் கல்விமான்களாகவும், மேதாவிகளாகவும் தங்களை காண்பித்துக்கொண்டு பெயருக்கு பின்னால் பட்டம் பதவிகளை விளம்பரப்படுத்திக்கொண்டு கூறுகின்ற முட்டாள்தனமான கருத்துக்களை சில அப்பாவிகள் உண்மை என்று நம்புகின்றனர்.

இவ்வாறானவர்களின் பின்னணி பற்றி ஆராய்கின்றபோது இவர்கள் சிங்கள பிரதேசங்களில் உள்ள அரச நிறுவனங்களில் அல்லது வேறு துறைகளில் சிங்களவர்களுடன் தொழில் புரிவதனை காணக்கூடியதாக உள்ளது.

எனவேதான் உச்சி குளிர்ந்தவர்களாக அரசின் வரப்பிரசாதங்களையும், இன்னும் உயர் பதவிகளையும், இதர சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள இனவாதிகளுக்கு ஏற்றாற்போல் பிரச்சாரத்தினை மேற்கொண்டு தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசத்தை காண்பித்து முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் செய்து வருகின்றனர்.

இதற்காகவே அடித்தால் திருப்பி அடிக்காமல் அடியை வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும். அவ்வாறு அடிக்கும்போது தடுக்கின்றவர்களையும், கதறி அழுகின்றவர்களையும் குழப்பக்காரர்கள் என்று முத்திரை குத்துகின்றனர். இவ்வாறு முத்திரை குத்துவதற்காகவே தங்களது பதவி பட்டங்களை அதற்கான அங்கீகாரமாக மக்கள் மத்தியில் கான்பிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.

-முகம்மத் இக்பால்இ சாய்ந்தமருது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: