ஜோ பைடனின் வெற்றியும் பூகோள அரசியல் திருப்பங்களும்- உறுதியாக இருக்கும் கோட்டாபய; மோடியின் நிலைப்பாடு?

352

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள பரம்பரை அமெரிக்க வெள்ளையரான கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பைடன், சர்வதேச அரசியல், பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சிகள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் பலரிடம் வரவேற்பையும் வேறு சிலரிடம் முகச் சுழிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. ரஷியா, அமெரிக்காவின் நேரடி எதிரிநாடு. ஆனால் மெக்சிகோ கடுமையான எதிரி நாடென்று கூறுவதற்கில்லை. இருந்தாலும் ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவிக்க மெக்சிகோ ஜனாதிபதி மறுத்துள்ளார். சீன ஜனாதிபதி அமைதியாகவுள்ளார். ஆனால் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஆர்ப்பரிப்பில்லாம் பாரட்டியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அரச கட்டமைப்பின் (American structure (System)) கட்டுப்பாடுகளையும் அதன் பரிந்துரைகளையும் பொருத்படுத்தாமல் அல்லது செவிமடுக்காமல் செயற்பட்டமை பூகோள அரசியல் (Geopolitics) செயற்பாடுகளில் பல்வேறு தாக்கங்களைச் செலுத்தியிருந்தன. நூற்றுக்கு 85சதவீதமான சர்வதேச அரசியல் அணுகுமுறைகள், தந்திரோபாய நகர்வுகளுக்கு டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகள் சேதத்தை விளைவித்ததாகவே நியோர்க் ரைம்ஸ் போன்ற அமெரிக்கப் பத்திரிகைகள் குற்றம் சுமத்தியிருந்தன. நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை ஜோ பைடனின் ஜனநாயகக் குடியரசுக் கட்சிக்குச் சாதகமானதானது. ஆனாலும் அது மேற்குலக உயர்மட்ட இராஜதந்திரிகள் அதிகமாக விரும்பி வாசிக்கும் பத்திரிகையாகும்.

அமெரிக்கப்  பத்திரிகைகளின் கண்ணோட்டத்தின் பிரகாரம் அவதானித்தால், அமெரிக்கர்களின் சுயமரியாதையை டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி இல்லாதெழித்து விட்டதென்ற தொனி தென்படுகின்றது. டொனால்ட் ட்ரம் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியாகப் பதிவியேற்றபோதே விமர்சித்திருந்த நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை, பராக் ஒபாமாவின் மலசல கூடத்தைக் கூடக் கழுவுவதற்குத் தகுதியற்றவர் டொனால்ட் ட்ரம் என்றும் கிண்டலாகக் விமர்சித்திருந்தது. அந்தளவுக்கு டொனல்ட் ட்ரம்ப்பை விமர்சித்திருந்த அமெரிக்கப் பத்தரிகைகள், ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய உலகம் என்ற கருத்தின் அடிப்படையில் தற்போது செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ட்ரம்புக்கு ஆதரவான பொக்ஸ் நியுஸ் செய்திச் சேவைகூட, சர்வதேசத்தின் பார்வையில் புதிய அமெரிக்கா என்பது போன்ற விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளது.

அதேவேளை, சீனா, ஈரான் போன்ற நாடுகள், மிகவும் உன்னிப்பாகவே ஜோ பைடனின் வெற்றியையும் அதன் பின்னரான பூகோள அரசியல் செயற்பாடுகள் பற்றியும் அவதானிக்க ஆரம்பித்துள்ளன. ஏனெனில் ஜோ பைடன் நிச்சயமாக அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்கள் மற்றும் காங்கிரஸில் உள்ள செனட்சபைக்கும் கட்டுப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு ஏற்பவும் செயற்படக் கூடிய ஒருவர். அமெரிக்கா எதிர்ப்பு நாடுகளைப் பொறுத்தவரை, அமெரிக்க ஜனாதிபதியை விட அமெரிக்க அரசு என்ற கட்டமைப்புக்கே (American structure (System)) அதிகளவில் அச்சமடைகின்றன. ஆனால் டொனால்ட் ட்ரம்பின் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு அவ்வாறான அச்சம் இருக்கவில்லை. ஏனெனில் ட்ரம், அமரிக்க அரசு கட்டமைப்பை மீறித் தனித்தே முடிவுகளை எடுத்திருந்தார்.

உதாரணமாக பருவநிலை மாற்றங்கள் தொடர்பான பரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா விலகியது. அமெரிகா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஒன்னைந்து 2016ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட்டிருந்தன. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புவியின் சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்ஷியசுக்குக்குக் கீழான சமநிலையில் வைத்திருப்பதற்குரிய சர்வதேச ஒப்பந்தம் அது. தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவையும் இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது. ஆனால் டொனால்ட் ட்ரம் அமெரிக்கர்களின் தொழில் வாய்ப்புகள் இழப்பதாகக் கூறியே இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிவிட்டார்.

இஸ்ரேல் நாட்டுக்காக ஜெனிவா மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்காவை 2018ஆம் ஆண்டு வெளியேற்றினார் டொனால்ட் ட்ரம். சர்வதேச நீதிமன்றம், ரோம் உட்படிக்கை ஆகியவற்றில் இருந்து வெளியேறுவதங்கான அறிவித்தல்களையும் டொனால்ட் ட்ரம் வெளியிட்டிருந்தார். ஆனால் வெளியேறுவதற்கிடையில் அவரின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இவ்வாறு அமெரிக்காவின் உலகத் தரத்தை மதிப்பிழக்கச் செய்தவர் டொனால்ட் ரம்ப் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலேயே ஜோ  பைடன் மாற்றத்திற்கான ஒருவராக வர்ணிக்கப்படுகிறார்.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா எடுத்திருக்கும் நகர்வுகள் கடந்த நான்கு ஆண்டுகள் கடுமையானதாகவே இருந்தன. ஆனாலும் மலபார் கடற்பரப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொண்டுவரும் கூட்டுப் பயிற்சியை ஜோ பைடன் நிர்வாகம் தொடரக் கூடும். ஏனெனில் அந்தப் பயிற்சிக்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவிடமே விடப்பிட்டிருக்கிறது. அத்துடன் இந்தோ- பசுபிக் விவகாரம் அமெரிக்க இந்தியக்கூட்டு அணுகுமுறையாகவே சமீபகலாமாக நகர்த்தப்பட்டும் வருகின்றது.

பாகிஸ்தானோடு அமெரிக்கா 2004ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட கூட்டாளி உறவு டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலத்தில் விடுபட்டு வந்த நிலையில், ஜோ பைடன் நிர்வாகம், இலங்கையை எந்தளவுக்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதற்கான நகர்வுகளில் அதிகளவு கவனத்தைச் செலுத்தக்கூடும். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் நிச்சியம் ஜோ பைடனுக்கு அவசியமாகும். இலங்கையை சீன உதவித் திட்டத்தில் இருந்து விடுவிப்பதன் மூலமே பாகிஸ்தான் சீன உறவில் தளர்வை ஏற்படுத்தலாமென இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். அதற்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒத்துழைக்கவும் கூடும். மலபார் கூட்டுப் பயிற்சியின் அவசியம் குறித்து ஜோ பைடன் வெளியிட்ட கருத்து அனைக் கோடிகாட்டுகிறது.

இதனால்தான் என்னமோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகவே ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் போலும். இந்தியாவுக்குப் பாதிப்பில்லாத இந்தோ- பசுபிக் பிராந்திய நலனையே இலங்கை முன்னெடுக்குமென வெளியுறவு அமைச்சின் செயலாளர் முன்னாள் இராணுவ உயர் அதிகாரி பேராசிரியர் ஜெநாத் கொலம்பகே டெய்லி பிட் (DailyFT) என்ற ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுக கிழக்கு முனை அபிவிருத்தித் திட்டத்தைக்கூட இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் கையளிப்பதற்குக்கும் இலங்கை தயாராகவுள்ளதென்ற தொனியிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆகவே ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து போகக்கூடிய அதுவும் சீனக் கடனுதவித் திட்டங்களில் இருந்து விடுபட்டும், சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கக் கூடிய முறையிலும் இலங்கை செயற்படும் என்ற செய்தி இதன் மூலம் வெளிப்படுகின்றது.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தைவிட அமெரிக்காவுடன் இணைந்து செயற்படக் கூடிய நிலைப்பாட்டையே கோட்டாபய ராஜபக்ச ஆரம்பம் முதல் வைத்திருந்தார். ஆனால் டொனால்ட் ட்ரம்பின் தன்னிச்சையான முடிவுகள். செயற்பாடுகளைப் பலவீனமாகக் கருதி அதன் மூலம் பூகோள அரசியலில் பெறக்கூடிய லாபங்களில் மைத்தி- ரணில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவே அதன் பிரதான சூத்திரதாரியாக இருந்தார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் சீன உதவித் திட்டங்களுக்குத் தொடர்ந்து இடமளித்திருந்தது. ஆனாலும் இரண்டாவது பதவிக் காலத்தை டொனால்ட் ட்ரம் இழப்பார் என்றொரு எதிர்ப்பார்ப்பிலேயே, அமெரிக்க அரச கட்டமைப்பு, இலங்கையை ஆரத்தழுவுவதற்கான நகர்வுகளில் கோட்டாபய ஈடுபட்டிருந்தார். டொனால்ட் ட்ரம் நிர்வாகத்தில் அமெரிக்கச் இராஜாங்கச் செயலாளராக மைக் பொம்பியோ பதவி வகித்திருந்தாலும், அவர் அமெரிக்க அரச கட்டமைப்பின் உயர் இராஜதந்திரி. அதனால்தான் சென்றவாரம் மைக் பொம்பியோ கொழும்பு வந்தபோது கோட்டபாய அதனை நன்கு பயன்படுத்திருந்தார் என்ற கருத்துக்களும் உண்டு.