மோடிக்கு அனுப்பவுள்ள கடிதமும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய 900 மில்லியனும்

139

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா அமர்வு நடைபெறவள்ளது. இம்முறை இலங்கை விவகாரம் குறித்து மனித உரிமைச் சபையின் ஆணையாளர் அறிக்கையென்றை வெளியிடவுள்ளார். இதன் பின்னணியில் இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள கடிதம், ஆணையாளரின் அந்த அறிக்கையை மேலும் மென்மையாக்க்கக்கூடிய ஏதுநிலையே காணப்படுகின்றது.

அ.நிக்ஸன்

இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தை மையமாக வைத்து ஈழத்தமிழர் விவகாரம் கையாளப்படுகின்றது என்பது பட்டவர்த்தனம். இந்தவொரு நிலையில், அமெரிக்க- இந்திய அரசுகளைத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்பச் செயற்படவைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இனிமேல் சிவில் சமூக அமைப்புகளிடமே வந்திருக்கின்றது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் தேர்தல் அரசியலில் மாத்திரம் கவனம் செலுத்தியுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகள், வல்லரசு நாடுகளின் நிகழ்ச்சிரலுக்கு வசதியான முறையிலேயே அவ்வப்போது இயங்குகின்றன என்பதை கடந்த பண்ணிரெண்டு வருடங்களாக அவதானித்திருக்கின்றோம்.

2009 இற்கு முன்னரான காலத்திலும் சரி அதற்குப் பின்னரான சூழலிலும் சரி, இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்திருக்கின்றது. இதன் பின்னணியில் இந்தியாவை எப்படிக் கையாள்வது என்றதொரு செயல்திட்டம் தமிழர்தரப்பிடம் இதுவரை இல்லை.

தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையில்லாத நிலையிலும் இரண்டாவது முறையாகவும் தற்காலிக உறுப்பினராக இந்தியா இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பது மற்றும் வலுவூட்டுவதை இந்தியா மேற்கொள்ளுமென ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கூறியிருக்கிறார்.

ஐ.நா., சபையில் மிகவும் முக்கியமான பாதுகாப்புச் சபையில் 15 நாடுகள் உறுப்புரிமை பெற்றிருக்கின்றன. ஆனால் நிரந்தரமில்லாத உறுப்புரிமையில்லாத இந்தியா இந்த ஆண்டும் தற்காலிக உறுப்பு நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, யூன் மாதம் தற்காலிக உறுப்பினராக இந்தியா நியமனம் பெற்றிருந்தது.

இந்தியா இவ்வாறு எட்டாவது முறையாகவும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்பினராகப் பதவி வகிக்கின்றது. இந்தக் காலகட்டங்களில், இந்தியாவின் முன்னுரிமைகளை உறுதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தியதாகத் திருமூர்த்தி கூறியிருக்கிறார்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு இந்தியா தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருந்தது. இது இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலம் கொடுக்கின்ற கௌரவமாகவே அவதானிக்கலாம். ஏனெனில் சீனாவை மையப்படுத்திய இந்தோ- பசுபிக் விவகாரத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம். அதனால், இந்தியாவுக்கான இந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது கண்கூடு.

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் தலைமை தாங்கியபோது, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதம் போன்ற பல முக்கிய பிரச்னைகளை இந்தியா முன்னிறுத்தியிருந்தது.

மீண்டும் தற்காலிக உறுப்புரிமை நீடிக்கப்பட்டுத் தலைமைப் பொறுப்பும் வழங்கப்படவுள்ள சூழலில், கடல்சார் பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட குறிப்பாக இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரம் போன்ற விடயங்களில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

இந்தவொரு சூழலில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா அமர்வு நடைபெறவள்ளது. இம்முறை இலங்கை விவகாரம் குறித்து மனித உரிமைச் சபையின் ஆணையாளர் அறிக்கையென்றை வெளியிடவுள்ளார். இதன் பின்னணியில் இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள கடிதம், ஆணையாளரின் அந்த அறிக்கையை மேலும் மென்மையாக்க்கக்கூடிய ஏதுநிலையே காணப்படுகின்றது.

ஆகவேதான் ஈழத்தமிழர் அரசியல் விடுதலை விவகாரங்களில் இனிமேல் சிவில் சமூக அமைப்புகள் மேலெழ வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியிருக்கின்றது. நீதியான அழுத்தம் ஒன்று இருக்குமானால், சர்வதேச நாடுகள் அதனைச் செவிசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும்.

ஏனெனில் இந்தியாவுக்கு நிரந்த உறுப்புரிமை நீடிக்கப்பட்டாலும், முஸ்லிம் பெண்களை ஏலம் விடும், ‘சல்லி டீல்ஸ்’ என்ற சமூக வலைதளம் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளமைக்கு ஐ.நா கடும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் வெறுப்பு பேச்சு போன்றவற்றுக்கு இந்தியா இடமிளிக்கக்கூடாதெனவும் அந்தக் கண்டனத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வானதொரு நிலையில், சர்வதேசத்தை நோக்கிய ஈழத்தமிழர்களின் அழுத்தம் தீவிரமடைந்தால் நிச்சியமாக ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும். விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவும் அதற்கு இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

ஆனால் செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் என்ற இரு அணிகள் மூலம் தமிழ்த்தேசியக் கட்சிகள் இயக்கப்பட்டு வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியலுக்கு ஏற்ப பயன்படுத்துப்படுகின்றனர் என்பதை சமீபகால நகர்வுகள் கோடிகாட்டுகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேரில் சந்தித்து உறுதிப்படுத்தினார். மோடிக்குக் கடிதம் அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட அன்றைய நாளே தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

பசில் ராஜபக்ச கடந்த ஆண்டு யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்று உரையாடியிருந்தார். கொழும்பு திரும்பி நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். அப்போது ஆரம்பித்த இந்த நகர்வு செல்வம், சுமந்திரன் அணியாகப் பிரித்தாளப்பட்டு இயக்கப்பட்டதன் பின்னணயில் இந்த நகர்வை அவதானிக்க முடியும்.

அதாவது அமெரிக்க- இந்திய அரசுகளின் பரிந்துரைகளும் அதற்கேற்ற முறையிலான இலங்கையின் அணுகுமுறையும் ஒத்திசைவாகவே செல்வதை புரிந்துகொள்ள முடியும்.

இந்த நிலையில், தமிழ்த்தேசியக் கட்சிகள் தாம் கைச்சாத்திட்ட ஆவணத்தைக் கொழும்பு கொள்பிட்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கத் தயாராக இருந்தபோது, தூதுவர் கோபால் பாக்லே புதுடில்லிக் சென்றிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

இதனால் கடிதம் கையளிக்கப்படவில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நல்ல நாள் பார்ப்பதாகவும் இதனாலேயே ஆவணத்தைக் கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டதென்றும் தமிழ் நாளேடுகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தவொரு நிலையில், இலங்கைக்கு தொள்ளாயிரம் மில்லியன் டொலர் வழங்குவது தொடர்பாக கொழும்பில் இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று இலங்கை மத்திய வங்கிக்கு நேரடியாகச் சென்று ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைச் சந்தித்து நிதியுதவி வழங்கப்படவுள்ள செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஆனால் 13 இற்கு அப்பால் என்று கூறப்படும் அதிகாரப் பரவலாக்கத்தைக் கோருவதற்காக மோடிக்கு அனுப்பவிருந்த ஆவணத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் இதுவரை கையளிக்கவில்லை.

ஆவணத்தைக் கையளிக்க வாருங்கள் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அதிகாரபூர்வமாக இன்னமும் அழைப்பு விடுக்கவில்லையா அல்லது தமிழ்த்தேசியக் கட்சிகள் அதிகாரபூர்வமாக இதுவரை கேட்கவில்லையா என்பது குறித்து எதுவுமே அறிய முடியவில்லை.

ஆனாலும் ஆவணத்தைப் பெற வேண்டுமென்பதில் கோபால் பாக்லேக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லையென கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள நிதியுதவி தொடர்பான செய்திக்கு கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இலங்கை சமீபகாலமாக எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடியைக் குறைக்க இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்குமெனவும் இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

900 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்பதை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியத் தூதுவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் வர்த்தகச் செயற்பாடுகளில் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் எனவும் இந்திய ஊடகங்கள் விபரிக்கின்றன.

சிங்கள ஆட்சியாளர்களும் பௌத்த குருமாரும் சிங்கள மக்களில் பெரும்பான்மையோரும் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தினால், இலங்கையில் தாம் நினைப்பதைச் சாதிக்கலாமென்ற எண்ணக்கருவுடன் அமெரிக்க- இந்திய அரசுகளும் செயற்படுகின்றன என்பதே இங்கு பட்டவர்த்தனம்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இருந்து பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ்த்தேசியக் கட்சிகள், தேசம்- சுயநிர்ணய உரிமை என்பதிலும், இன அழிப்பு விசாரணையை நடத்துங்கள் என்ற கோரிக்கையிலும் பிடிவாதமாக ஒருமித்த குரலில் நின்றிருந்தால், இன்று நிலைமை மாறியிருக்க வாய்ப்புண்டு.

அதற்கேற்ப இன்றைய புவிசார் அரசியல் போட்டிகளும் நிலவுகின்றன. இருந்தாலும் தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனம் செலுத்தியதனால் ஏற்பட்ட விளைவே இன்று கையாளப்படும் இனமாக மாற்றப்பட்டிருக்கின்றது.