• Dec 01 2022

உலகளாவிய ரீதியால் இடம்பெற்ற பாரிய முறைகேடு: களத்தில் இறங்கிய பிரித்தானிய பொலிஸார்!

Sharmi / 6 days ago
image

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோர் விசாரணைக்குள்ளாகவுள்ளதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

போலி இணைய பக்கம் ஊடாக வங்கி அதிகாரிகள் என அடையாளப்படுத்தி முறைகேடில் ஈடுபட்ட குழு ஒன்று காவல்துறை நடவடிக்கையில் சிக்கியுள்ளது. குறித்த நடவடிக்கையால் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைதாகியுள்ளனர். iSpoof என்ற இணைய பக்கமூடாகவே இந்த முறைகேடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போலி இணையப் பக்கம் முடக்கப்படும் முன்னர் சுமார் 3.2 மில்லியன் பவுண்டுகள் வரையில் இந்த குழுவினர் ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த iSpoof  இணைய பக்கத்தால் பாதிக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 70,000 பிரித்தானியர்களை அடுத்த இரு தினங்களில் காவல்துறையினர் விசாரிக்க உள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் மொத்தம் 20,000 பேர்களிடம் 48 மில்லியன் பவுண்டுகள் வரையில் வங்கி அதிகாரிகள் என்ற போர்வையில் இந்த குழுவினர் கொள்ளையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 10,000 பவுண்டுகள் வரையில் பறிகொடுத்துள்ளனர். ஆனால் ஒரு பிரித்தானியர் மட்டும் 3 மில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 120 பேர் பிரித்தானியாவில் கைதாகியுள்ளனர். பெரும்பாலானோர் லண்டன் பகுதியை சேர்ந்தவர்கள் . ஹாலந்து,அவுஸ்திரேலியா,பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இருந்தும் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

iSpoof  என்ற இணையமூடாக 10 மில்லியன் மோசடி தொலைபேசி அழைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 40% அமெரிக்க மக்களை குறிவைத்துள்ளதும், 35% பிரித்தானிய மக்களை இலக்கு வைத்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

 iSpoof  தளத்தை நிர்வகித்து வந்த 35 வயதான Teejay Fletcher  என்பவரை இந்த மாத ஆரம்பத்தில் லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.