மட்டு கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலை அதிபர்,ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பிலும் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இன்றைய தினம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.


இராம கிருஸ்ணமிசன் பாடசாலையின் உடைமைகள் கடந்த சில நாட்கள் சேதமாக்கப்பட்டுவருவதுடன் அதிபர் ஆசிரியர்களுக்கு சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாட்டை கண்டித்தும் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


சாதாரண தர பரீட்சைக்காக பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டு இன்று மீண்டும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை பாடசாலைக்குவந்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமக்கு தீர்வு வழங்க கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.


பாடசாலைக்குள் இருந்த சீசிரிவி கமராக்களை உடைத்துள்ளதுடன் பாடசாலை அதிபரின் காரியாலயம்,நடன ஆசிரியர் காரியாலயம் மற்றும் பாடசாலையின் தளபாடங்களை உடைத்துள்ளதுடன் சில மாணவர்களும் பெற்றோரும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் சுகுணதாஸ் ரவிசங்கர் தெரிவித்தார்.


பாடசாலையில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சம்பவங்கள் தொடர்பில் பாடசாலை சமூகமும் கிராம மக்களும் அக்கரையற்ற நிலையில் உள்ளதனால் தங்களுக்கு தொடர்ந்து இந்த பாடசாலையில் கடமையாற்ற முடியாத நிலையுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.


இதன்போது பாடசாலைக்கு வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸாரும் அதிபர்,ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இது தொடர்பிலான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன் இது தொடர்பான தகவல்களை பொதுமக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் த.அனந்தகுமார் தலைமையிலான குழுவினர் போராட்டம் நடாத்திய அதிபர்,ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்.


இதன்போது உடனடியாக காவலாளி ஒருவரை பாடசாலைக்கு நியமிக்கவும் பெற்றோரை அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கி எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் இதன்போது அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து ஒரு வார அவகாசம் வழங்குவதாகவும் அதற்குள் தாங்கள் சுதந்திரமாக தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிலைமை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கையெடுக்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இங்கு அதிபர்,ஆசிரியர்களினால் தெரிவிக்கப்பட்டது.


பாடசாலைகள் தொடர்ந்து சிறப்பாக இயங்கவேண்டுமானால் மாணவர்களின் ஒழுக்கம் என்பது மிகவும்முக்கியமானது.இவ்வாறான பிரச்சினைகளினால் ஆசிரியர்களும் மனஉளைச்சலுக்குள்ளாகி இடமாற்றம் கோரிவருகின்றனர்.

இது தொடர்பில் பாடசாலை சமூகமும் பொலிஸாரும் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது இந்த பாடசாலை நல்ல நிலைக்குவருவதற்கான சாதகமான சூழல் ஏற்படும் என இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் த.அனந்தகுமார் தெரிவித்தார்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை