பிரபல கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் விடுத்த வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து விலகவுள்ளதாக இந்திய நடிகர் விஜய் சேதுபதி சற்று முன்னர் தனது சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

800 படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை ரத்துச் செய்து அந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுமாறு முரளிதரன் நடிகர் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து தான் விலகமாட்டேன் என்று விஜய் சேதுபதி முரளிதரனிடம் கூறியிருந்தார்.

ஆனால் சில மணி நேரத்தில் தனது முடிவைமாற்றிய விஜய் சேதுபதி, படத்தில் இருந்து நடிப்பதில் தான் விலகுவதாகவும் நன்றி, வணக்கம் என்றும் தனது ரூற்றர் பதிவில் கூறியுள்ளார்.

800 படத்தில் நடிப்பதற்கு தமிழகத்திலும் இலங்கையின் வடக்குக் கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் கடும் எதர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவு வைத்திருந்த முரளிதரன், ஈழப் போர் முடிவுக்கு வந்தமை தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.

அத்துடன் போரின்போது இருபது முப்பது பேர்தான் காணாமல் போனதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார் உண்மை சொல்கிறார்களா இல்லையா என்பதை அறிய முடியாதெனவும். முரளிதரன் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனிடம் நேரடியாகவே கூறியிருந்தார்.

ஈழப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பாக பிரதமர் டேவிற் கமரோன் யாழ்ப்பாணத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்த பின்னர், அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே டேவிற் கமரோனைச் சந்தித்த முரளிதரன், ஈழப் போரின்போது இராணுவம் புலிகள் என்ற இரண்டு பக்கங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்ததென்றும் போர் நடைபெறும்போது இழப்புகள் தவிர்க்க முடியாதவை எனவும் கூறயிருந்தார்.

இதனால் முத்தையா முரளிதரன் தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்பதி ஏற்பட்டிருந்தது. முரளிதரன் மலையத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒருபோதும் பேசியதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியிருந்தார். முரளிதரன் அரசியலில் பலவீனமானவர் எனவும் மனோ கணேசன் கூறியிருந்தார்.

அதேவேளை, மலையத் தமிழ் மக்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்காத ராஜபக்ச ஆட்சியாளர்களோடு நெருங்கமான உறவை வைத்துள்ள முரளிதரன் தொடர்பான 800 திரப்படம், சிங்கள ஆட்சியாளர்களையும் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்பதையே சித்தரிக்குமென அருட் தந்தை சக்திவேல் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை சிங்களவர்களையும் சிங்கள ஆட்சியாளர்களையும் நியாயப்படுத்தி சிங்கள பௌத்த சமயக் கலாச்சாரங்களை தமிழ் மக்கள் ஏற்றுச் செயற்பட வேண்டுமெனக் கூறுகின்ற முரளிதரன், தனது 800 படத்தை சிங்கள மொழியில் எடுக்கலாமே என்று தமிழகத்தின் மூத்த பத்தரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பினார்.

தமிழகத் திரைப்படத் துறையில் மூத்த இயங்குநர் பாராதிராஜா உள்ளிட்ட மூத்த நடிகர்கள், பாடகர்கள் எனப் பலரும் விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

சமூக அநீதிக்கெதிரான திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமான விஜய்சேதுபதி, முரளிதரன் பற்றிய 800 படத்தில் நடப்பது தமிழ் மக்களுக்கு அவமானம் என்று தமிழகத் திரைப்படத்துறையினர் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்

இவ்வாறு பலரும் சுட்டிஇக்கட்டியிருந்த போதும் 800 திரைப்படத்தில் நடிப்பதல் இருந்து விலக மறுத்திருந்த விஜய் சேதுபதி, முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். 

சிறந்த நடிகர் ஒருவர் ரசிகர்களின் எதர்ப்பைச் சம்பாதிக்கத் தான் விரும்பவில்லையென முரளிதரன், விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

800 திரைப்படம் எடுக்கும் முயற்சி தொடரும் என்றும், சரியான சந்தர்ப்பத்தில் திரைப்படத்தை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்றும் முரளிதரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, முரளிதரன் ஒரு சிறந்த கிரிக்கட் வீரன். ஆனால் அவர் ராஜபக்சவின் பக்கத்தில் நின்று கொண்டு ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதை ஏற்க முடியாதென இயக்குநர் பாரதிராஜா கூறியிருந்தார்.

இலங்கையின் சிங்கம் பொறித்த சிங்களத் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும், பௌத்த சமயத்தையும் மற்றும் ஒற்றையாட்சி அரச கட்டமைப்பையும் ஈழத் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை முரளிதரனின் 800 திரைப்படத்தின் மூலம் நியாயப்படுத்தியிருப்பார்களென அரசியல் ஆய்வாளர் சோதிலிங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.