ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது! மஹிந்த

80

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியில் அவ்வாறான நெருக்கடிகள் எதுவும் இல்லையெனவும், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மத்திய குழு, அமைப்பாளர்கள் மற்றும் கிராம உறுப்பினர்கள் அனைவரும் இதே கருத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் கட்சி அமைப்புகளை பலப்படுத்தி வருகிறோம்.

கட்சியை மறுசீரமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், சிலர் கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அது பற்றி பொருட்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில கட்சிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் இன்று கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்க முடியாத நிலை காணப்படுகின்ற போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவ்வாறானதொரு பிரச்சினை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.