2000 நாட்களை எட்டியுள்ள வடகிழக்கு காணாமலாக்கட்டோரின் உறவுகளின் போராட்டம் – நாளை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும் கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளமையை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் நாளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுடன் அவர்களுக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஆரம்பித்த கவனயீர்ப்புப்போராட்டம் நாளையுடன் 2000 நாட்களை எட்டவுள்ளது.

அதனை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமுன்றலில் நாளை காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கவனயீர்ப்புப்போராட்டம் பேரணியாகச்சென்று டிப்போ சந்தியில் நிறைவடையும்.

அதுமாத்திரமன்றி பேரணியின் நிறைவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் கிளைக்காரியாலயத்தில் ஊடாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதிக்கான மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இது இவ்வாறிருக்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்பதற்காக தமது சங்கத்தின் சார்பில் குறைந்தபட்சம் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பிவைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தற்போது இலங்கையின் தெற்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களும் தமது நீண்டகாலப்போராட்டமும் வேறுபட்ட நோக்கங்களை இலக்காகக்கொண்ட மாறுபட்ட போராட்டங்கள் என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொண்டவேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை