ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினால் நிந்தவூரில் தொடர் கடலரிப்பு-மீனவர் கட்டிடம் சேதம்!

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினால் நிந்தவூரில் தொடர் கடலரிப்பு மற்றும் மீனவர் கட்டிடம் சேதம் தொடர்பில் மீனவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தாவது,

அண்மை நாட்களாக நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்பின் காரணமாக கடலோரத்தை அண்டிய கரையோரங்கள் பாதிக்கப்படுவதுடன் மீனவர்களின் வாடிகள், தென்னை மரங்கள் மற்றும் அவர்களின் பல்தேவைக் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் கடலினால் அள்ளுண்டு போகின்றன.


குறித்த தொடர் கடலரிப்பின் காரணமாக மீனவர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன்  தங்களின் மீன்பிடி சம்பந்தமான விடயங்களை கலந்தாலோசித்துக் கொள்வதற்கும்  அவைகளை சிறந்த முறையில் நிர்வகித்துக் கொள்வதற்கும் பல தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டு தற்பொழுது அவர்கள் நடு வீதிக்கு வரும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினால் இக்கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அதனை மூடும் பட்சத்தில் தொடர் கடலரிப்பை தடுக்க முடியும் என கருத்துக்களை ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.


கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் தொடர் கடலரிப்பின் மூலமாக பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்த போதும்  அது அரசியல்வாதிகள் மற்றும் அரச அலுவலகங்கள் மூலமாக சிறிது சிறிதாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

இவ்வாறு இருக்கும் நிலையில், நிந்தவூர் 9ம் பிரிவு  பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள மீனவர்களுக்குச் சொந்தமான மீனவர் சங்கக் கட்டிடம் தொடர் கடலரிப்புக் காரணமாக முழுமையாக  கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளது.

 இந்தக் கட்டிடமானது மீனவர்கள் தங்களது மீனவர் சங்க செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததுடன்  அதன் பிறகு நிந்தவூர் ஒன்பதாம் பிரிவு சனசமூகநிலைய கட்டிடமாகவும் இயங்கி வந்தது.

இதில் மீனவர்களின் கூட்டங்கள்  வேறு சங்கங்களின் கூட்டங்கள் மற்றும் இதர நிகழ்வுகள் என்பன நாள்தோறும் நடைபெற்று வந்ததுடன் இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் இப்பகுதி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் என்பன பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில்  கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த காலங்களில்  தொடர் கடலரிப்பின் காரணமாக  ஒரு பகுதி கடலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது.ஆனால்  இன்னும் மீதமாக இருந்த  இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி முழுமையாக கடலரிப்பினால் தற்போது  சேதமடைந்துள்ளது.

ஏனைய எஞ்சிய பகுதிகளும்  இன்னும் ஓரிரு வாரத்தில் கடலினால் அள்ளுண்டு போகும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இருந்தபோதும் கடந்த காலத்தில் இக்கட்டிடம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பைத் தடுப்பதற்காக   கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின்  வழிகாட்டலுடன் தற்காலிகமாக மண்மூடைகள் நிரப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தாலும் கடல் அலைகளுக்கு அது தாக்குப்பிடிக்க முடியாமல் அள்ளுண்டு போனது.


ஆனால் இந்தப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தை நிரந்தரமாக பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் நிந்தவூர் பிரதேச செயலகமோ அல்லது கரையோர பாதுகாப்பு திணைக்களமோ அல்லது இப்பிரதேச அரசியல்வாதிகளோ எடுக்கவில்லை என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.


இவ்வாறான நிலை தொடர்ந்து செல்லுமானால் கடைசியில் கடற்கரை வீதியினூடாக பயணம் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையும் நிந்தவூர் பிரதேசத்திற்கு ஏற்படும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு மீள திறக்கப்பட்ட பின்னர்  நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற அதிகமான கரையோரப் பிரதேசங்கள் கடல் அலையினால் காவு கொள்ளப்பட்டு இந்த நிலங்கள் இருந்த அடையாளமே தெரியாமல் செல்வதாக மீனவர்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

இதிலே இப்பிரதேச மக்களின் தென்னந்தோப்புகள் மீனவர்களின் மீனவ வாடிகள் என இவைகள் நீண்டு கொண்டே செல்வது தொடர்கதையாகின்றது. எனவே, நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் இருக்கும் வளங்களையாவது பாதுகாப்பதற்கு இவர்கள் அனைவரும் முன்வர வேண்டும்  என  இப்பிரதேச மீனவர்களும் பொதுமக்களும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

DCIM\100MEDIA\DJI_0400.JPG
DCIM\100MEDIA\DJI_0407.JPG
DCIM\100MEDIA\DJI_0426.JPG

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை