தொடரும் கனமழை காரணமாக முல்லையில் ஒருவர் உயிரிழப்பு- 101 பேர் பாதிப்பு!

93

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 34 குடும்பங்களை சேர்ந்த 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது

இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம் புகுந்து காணப்படுவதோடு வயல் நிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன இதன்காரணமாக பல்வேறு குடும்பங்களை சேர்ந்த நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

சீரற்ற வானிலையோடு நிலவும் கடும் காற்று காரணமாக, மக்கள் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில்,

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் ஆனந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 17 பேரும், புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும், தேவிபுரம் கிராம அலுவலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 34 பேரும் மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 4 பேருமாக 19 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மன்னாகண்டல் பகுதியில் மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்துவரும் நிலையில் குளங்கள் பல வான் பாய்ந்து வருகிறது

கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதோடு கடும் காற்றும் வீசிவருகின்ற நிலையில், இன்னும் கனமழை தொடருமானால் கடும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மழை காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆனந்தபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் அவர்களுடைய வீடுகளில் இருந்து இராணுவத்தினரால் படகு மூலம் கொண்டு வரப்பட்டு ஆனந்தபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

குறித்த ஆனந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு வெள்ளம் வர பிரதான காரணம் எமது பகுதியில் உள்ள நீர் செல்லும் கழிவு வாய்க்காலை மறித்து வயல் விதைத்துள்ளார்கள்.

இதுதொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறைபாட்டை உடனடியாக சீர்செய்து தருமாறும் தமது போக்குவரத்துக்கு குறித்த பகுதியில் பாலம் ஒன்றை அமைத்து தருமாறும்,

குறித்த இடத்தில் பாலம் இல்லாமையால் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் கடந்த பத்து நாட்களாக பிள்ளைகள் பாடசாலைக்கு கூட செல்லவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே குறித்த கழிவு வாய்க்காலுக்கு ஊடாக செல்லும் எமது பாதையில் பாலத்தினை அமைத்து தருமாறும் கழிவுநீர் செல்ல இடையூறாக உள்ள வயல்களை அகற்றி நீர் கடலுக்கு செல்ல ஆவண செய்யுமாறும் கோருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: