பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரங்கள் குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

211

பி.சி.ஆர்.இயந்திரங்களை உடனடியாக திருத்துதல் மற்றும் புதிய பி.சி.ஆர்.இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் செயற்பாட்டை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டுக்குள் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடு பின்னடைவை அடைந்துள்ளது.

மேலும் நாட்டிலுள்ள பி.சி.ஆர்.இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ளமையே இதற்கான காரணமாக கருதப்படுகின்றது. இந்த பி.சி.ஆர்.இயந்திரங்கள் தரமானவையாக எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இவை பழுதானால், அதனை திருத்தும் தொழில்நுட்பமும் ஆட்களும் இலங்கையில் இல்லாதமை பெரும் இழப்பாக காணப்படுகிறது.

இதனால், நாட்டு மக்கள் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். சுகாதார சேவையில் ஆட்பலமும் குறைந்துள்ளது.

அத்தோடு பி.சி.ஆர்.இயந்திரங்களை துரிதமாக திருத்துவதும், புதிய பி.சி.ஆர்.இயந்திரங்களை வெளிநாடுகளில்ருந்து கொண்டுவருவதும் அத்தியாவசியமாக காணப்படுகிறது.

இதனை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு நபரையும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளாது, அரசாங்கம் இந்த பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டமொன்று, யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று வெள்ளிக் கிழமை காலை இடம்பெற்றது.

அத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும்.

இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.

மேலும் மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.