புத்தளத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு

82

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வுகளை இன்று புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் மாவட்டத்தின் புத்தளம், கற்பிட்டி, முந்தல், உடப்பு மற்றும் சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் தைப் பொங்கலை முன்னிட்டு பொங்கலும் , விஷேட பூஜைகளும் இடம்பெற்றன.

இதேவேளை பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குருவும் தர்மகத்தாவுமான பிரம்ம ஸ்ரீ எஸ்.பத்மநாபக் குருக்கள் தலைமையில் இன்று காலை 6.00 மணியளவில் பொங்கல் பொங்கப்பட்டு காலை 8.00 மணிக்கு விஷேட பூஜையும் இடம்பெற்றது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஆலய நிர்வாக சபையினர் உள்ளிட்ட குறைந்தளவிலான பக்தர்கள் இந்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

அத்துடன், புத்தளத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் அலங்கரித்து, புத்தாடை அணிந்து பொங்கல் பொங்கி சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தினர்.

இறைவனை நோக்கி உங்கள் உள்ளங்கள் என்றும் நன்றியால் பொங்கட்டும்! யாழ்.மறைமாவட்ட ஆயர்