ஜெனீவா மனித உரிமைச் சபை கூட்டத்திற்கு முன் மாகாண சபைத் தேர்தல்-அரசாங்கம் ஆலோசனை!

274

ஜெனீவா மனித உரிமைச் சபை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடுவதற்கு முன்னர் இலங்கைத் தீவில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்த ராஜபக்ச அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய யோசனையை முன்வைத்துள்ளார்.

அந்த யோசனைக்கு அனைத்து அமைச்சர்களும் இணங்கியுள்ளனர். எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான திகதியை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்குமெனக் கூறப்படுகின்றது. மூத்த சட்டத்தணி புஞ்சிகேவா தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு சென்ற புதன்கிழமை பதவியேற்றதும் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியிருந்தது.

அதன்போது மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மகிந்த ராஜபக்ச அறிவறுத்தியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், ஆமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை குறித்து மீளாய்வு செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள எச்சரிக்கை மற்றும் பல சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென மகிந்த ராஜபக்சவை தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பொரமுனகன் கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30ஃதீர்மானத்தில் இருந்து அரசாங்கம் வெளியேறியிருந்தாலும், அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவாறு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திப் புதிய அரசியல் யாப்பிலும் 13ஆவது திருத்தச் சட்ட யோசனைகள் உள்ளடக்கப்படுமென்ற செய்தியை சர்வதேசத்துக்குக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக அரசாங்கத்துக்குள் பேசப்படுகின்றது.

இதற்காகவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென்ற யோசகைள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்களோடு பேசியதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாகப் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் யோசனை ஒன்றைத் தயரித்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் கையளித்துள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் அந்த யோசனையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. அது குறித்து ஆலோசிக்க வேண்டிய தேவையில்லையென முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் அது பற்றி இதுவரை எதுவுமே கூறவில்லை. சுமந்திரன் திட்ட வரைபு ஒன்றைக் கையளித்திருக்கிறார். ஆனால் அதில் என்ன இருக்கிறது என்பது குறித்துத் தனக்கு எதுவுமே தெரியாதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வாகக் கருத முடியாதெனவும் அந்தத் திருத்தச் சட்டத்தைத் தும்புத்தடியால்கூடத் தொட்டுப் பார்க்க முடியாதெனவும் இரா.சம்பந்தன். 2006ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால் 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேட்டியிட்டு மாகாண சபையை செயற்படுத்தியுமிருந்தது.

இந்தவொரு நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாகக் காண்பிக்கும் நோக்கில், எதிர்வரும் மார்ச் மாதம் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல்களை நடத்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

அதேவேளை, இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற வெளியுறவு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய, சட்டத்தரணி சுமந்திரன், இலங்கை நீதித்துறையில் நம்பிக்கையில்லாதாலேயே தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையைக் கோரியதாகக் கூறியிருந்தார். சர்வதேச விசாரணையே அவசியமெனவும் அவர் வாதிட்டிருந்தார்.

ஆனால் சென்ற ஜனாதிபதித் தோ்தல் பிரசாரத்தின்போது கருத்து வெளியிட்டிருந்த சுமந்திரன், சர்வதேச விசாரணைகள் முடிவடைந்துவிட்டதெனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

அதனை மறுத்துரைத்திருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, நடைபெற்றது சர்வதேச விசாரணை அல்ல என்றும் அவை, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு மற்றும் ஜெனீவா மனித உாிமைச் சபை வெளியிட்ட ஆரம்ப அறிக்கைகள் மாத்திரமே என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.