கச்சதீவுப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்த இராமேஸ்வர மீனவர்கள்!

192

இந்திய – இலங்கை இரு நாட்டு மீனவர்களும் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க இலங்கை அரசுடன், மத்திய மாநில அரசுகள் பேசி துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழக இராமேஸ்வர மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கோரிக்கை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இராமேஸ்வர மீனவர்கள் இன்று காலை 11 மணி முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்புத்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் மீனவரின் படகு மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடலை ஆரம்பித்த இராமேஸ்வரம் மீனவர்கள், குறித்த கலந்துரையாடலில் முக்கிய 6 தீர்மானங்களை எடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் எடுத்த தீர்மானங்களாவன,

1.கடந்த 4 ஆம் திகதி இரவு கச்சதீவு பகுதியில் இந்தியப் படகு மீன் பிடிக்கும்போது இலங்கை குருநகர் பகுதியைச் சேர்ந்த படகில் மோதியதில் படகு சேதமடைந்துள்ளது. இரவு நேரங்களில் மீன்பிடிக்கும் போது தெரியாமல் நடந்த சம்பவத்திற்கு இந்திய மீனவர்கள் ஆகிய நாங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இலங்கை கரையோரப் பகுதியில், இந்திய மீனவர்கள் யாரும் மீன்பிடித் தொழில் செய்யக் கூடாது எனவும், மீறித் தொழில் செய்பவர்களுக்கு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. இந்திய – இலங்கை இரு நாட்டு மீனவர்களும் பிரச்சினை இல்லாமல் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 வரை இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த விசைப் படகுகள் பாராமரிப்பின்றி இலங்கைக் கடற்பரப்பிலே மூழ்கி சேதமடைந்து விட்டது. 5 வருடங்களாக படகை இழந்த குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி மிகவும் கஸ்டப்படுகின்றனர். படகை இழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கி மீனவ குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.

4.கடந்த ஒரு வருட காலமாக புதிய படகு வாங்கி வந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 19 மீன்பிடி விசைப் படகுகளுக்கு காலங்காலமாக வழங்கி வந்த மீன்பிடி அனுமதி சீட்டும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலும் மீன் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருவருட காலமாக மீன் பிடிக்க முடியாமல் 19 விசைப்படகு மீனவக் குடும்பங்களும், அதில் பணிபுரியும் மீனவ தொழிலாளர்களும் மிகவும் கஸ்டப்படுகின்றனர். ஆகவே, மீனவ வளத்துறை 19 விசைப் படகுகளையும் ஆய்வு செய்து மீன்பிடி அனுமதிச் சீட்டும் மானிய டீசலும் வழங்க வேண்டும்.

5.ஆண்டுக்குப் பல லட்சம் அந்நியச் செலாவனியை ஈட்டுக் கொடுக்கும் இந்த மீன்பிடித் தொழில் தினசரி டீசல் விலை ஏற்றத்தால் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பல லட்சம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக மீனவர்களுக்கு உற்பத்தி விலைகளியே, டீசல் வழங்க வேண்டும் என அரசை வலியுறுக்கிறோம்.

  1. இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றித்தர வேண்டும் என அரசை வலியுறுத்தி படகுகளை இன்று முதல் 15 ஆம் திகதி வரை வேலைநிறுத்தம் செய்யவதாகவும், எதிர்வரும் 13 ஆம் திகதி இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும், தொழிலாளர்களும், சார்பு தொழிலாளர்களும் இணைந்து போராடுவதாகத் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானங்களை மத்திய மானில அரசுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: