சருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகள்

619

கடுமையான சரும சுருக்கங்கள் தென்படும் இடங்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதி உள்ளன. மேலும் கண்ணைச் சுற்றி இருக்கும் இடங்கள், உதடு, கன்னங்களில் அதிக சுருக்கங்கள் தோன்றக்கூடும்.

வயது அதிகரிக்கும் போது சருமம் மிகவும் பலவீனமாகி, நெகிழும் தன்மையை இழப்பதால் சுருக்கங்கள் உண்டாகின்றன. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் சருமப் பாதிப்பை உண்டாக்குகின்றன.

குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கம் வயது முதிர்ச்சியைத் தூண்டி சருமத்தில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும் புகை பிடிப்பதால் சருமம் தினமும் நீர்ச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகிறது.

இதனால் சருமம் வறண்டு, சுருக்கங்கள் எளிதில் உண்டாகும். முகத்தைக் கழுவும் போது கழுத்தையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. அப்போது கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு, நச்சு போன்றவை வெளியேறும்.

கழுத்துப் பகுதியைக் கழுவுவதற்கு சவர்க்காரம் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் பி.எச். சமநிலையை மாற்றிவிடும். மூலிகை நீர் அல்லது மூலிகை சவர்க்காரம் பயன்படுத்தலாம்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது சூரிய கதிர்வீச்சில் இருந்து கழுத்தைப் பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

அதிகளவு தண்ணீர் பருகுவது சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும். சருமம் நீர்ச்சத்துடன் இருந்தால் சுருக்கங்கள் குறைவாகக் காணப்படும். முகத்துக்குப் பயன்படுத்தும் பேஸ் மாஸ்கை வாரத்துக்கு ஒருமுறை கழுத்தில் தடவி நன்றாக சுத்தம் செய்யலாம். அதன் மூலம் கழுத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் வெளியேறும்.