• Dec 01 2022

இலங்கையின் கையேந்து நிலை என்று வரை தொடரும்?

Tamil nila / 2 months ago
image

தெற்காசிய நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க உதவும் என்று நம்பும் ஜப்பான், ‘இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் மாநாட்டை’ ஏற்பாடு செய்வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

“ஆனால் பேச்சுக்களுக்கான சாத்தியங்களை, ‘நிச்சயமற்ற தன்மை’ ஒன்று மழுங்கடிக்கிறது” என்று திட்டமிடல் பற்றி அறிந்த மூவர் தெரிவிக்கின்றனர்.

அதாவது, சுதந்திரத்தின் பின்னர் கொழும்பை அதன் மோசமான கடன் நெருக்கடி யிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்கும் நாடுகளுக்கிடையில் பேச்சுக்களை நடத்துவதற்கு டோக்கியோ (Tokyo) தயாராக உள்ளது.

இதில், உயர்மட்டக் கடனாளியான சீனா இணைவது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. மற்றும் இலங்கையின் நிதி பற்றிய தெளிவின்மை இன்னும் உள்ளதென்று ஒரு வட்டாரம் ரொய்ட்டர்ஸிடம் (Reuters) தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில், 6.2 பில்லியன் (Billion) டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள இலங்கையின் கடனை நிவர்த்தி செய்வதற்கான செயல்முறைகளை விரைவுபடுத்தும் பட்சத்தில், சீனாவுடனான அத்தகைய சந்திப்பிற்கு ஜப்பான் தலைமை தாங்க தயாராக இருக்கும் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

இரு தரப்பு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கோரும் என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ரொய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் (Shinzo Abe) இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதால், ​​அடுத்த மாதம் டோக்கியோவில் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் (Fumio Kishida) இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டோக்கியோவுக்கு (இரண்டாவது கடனாளி), இலங்கையை மீட்பதில் பங்குள்ளது. அதன் 3 பில்லியன் டொலர் கடன்களை திரும்பப் பெறுவதில் மட்டுமன்றி, பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்பை சரி பார்க்கும் அதன் இராஜதந்திர ஆர்வமும் உள்ளது!

S&P Global இந்த மாதம் வட்டி மற்றும் அசல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போனதால், இலங்கையின் அரசாங்கப் பத்திரங்களை இயல்புநிலைக்குக் குறைத்தது.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைத் தீவு, வருடாந்த பொருளாதார உற்பத்தியில் 114% கடனுடன், பல ஆண்டுகளாக தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் கொவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்த சமூக மற்றும் நிதியியல் நிலைகளில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு ஒன்று புதனன்று ஜனாதிபதியை சந்தித்து நாட்டின் பொருளாதார பிணை எடுப்பு மற்றும் 29 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைப்பது உட்பட ஆலோசித்து, மேலும் 3 பில்லியன் டொலர் உதவித் திட்டத்தை நாடும் பேச்சுக்களையும் IMF உடன் மேற்கொள்ளவுள்ளது.

கடன் வழங்கும் நாடுகளை ஒன்றாக அழைத்து, இணைத்து, ஒன்றித்து பயனுள்ள வகையில் இயங்கச்செய்ய, ஒரு புதிய ‘தளம்’ வேண்டும் என்று டோக்கியோ நம்புவதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

“இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்தாததால், நேரம் முடிவடைகிறது; கடன் வழங்கும் நாடுகள் ஒரு பயனுள்ள திட்டத்தை ஒப்புக்கொள்வதே தற்போது முன்னுரிமையளிக்கப்பட வேண்டியது” என ஆதாரங்கள் கூறுகின்றன.

ஜப்பான் இதை முன்னோக்கி நகர்த்துவதில் மிக ஆர்வம் கொண்டுள்ளது என்பதன் உள்ளார்ந்த நோக்கங்கள் ஒருபுறமிருக்க, இது ஜப்பான் மட்டும் முன்னின்று சாதிக்கும் ஒன்றல்ல; இங்கு பல நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியமானது என்கின்ற அதே வேளை, இது பற்றிய மேலதிக விபரங்களை வெளியிடுவதற்கு ஜப்பான் வெளியுறவு அமைச்சு மறுத்துவிட்டது!

இலங்கையின் மத்திய வங்கியும், நிதி அமைச்சும் உடனடியாக பதிலளிக்கவில்லை. IMF செய்தித் தொடர்பாளரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்!!

பெரிய கடனாளிகளான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி மற்றும் பிராந்திய பதற்றங்கள், முடிவுறாத தொடர்ச்சியாக உள்ள அதே வேளை, இலங்கை தனது நிதியை சீர்திருத்துவதற்கும் அதன் கடன் பற்றிய கூடுதல் தகவல்களை வெளியிடுவதற்கும் உறுதியளிக்க வேண்டும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ​​பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவருக்கு எழுதிய கடிதத்தில், “ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் இலங்கை மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு என்னால் இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்கத் தயாராக உள்ளேன்” என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, அமெரிக்க விவசாயத் திணைக்களமும், ‘சேவ் த சில்ரன்’ (Save the Children) நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க 3,000 மெட்ரிக் தொன் (MT) உணவை வழங்குகிறமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

ஜப்பான் சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

சிசுவை வாங்கியவர் கைது: தந்தைக்கு வலை!

ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது கம்யூனிஸ்ட் நாடு!