வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

137

கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

வாக்களிப்பில் 151 உறுப்பினர்கள் ஆதரவாகவும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்த அதேவேளை எதிராக சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன வாக்களித்தன .

இந்த வாக்கடுப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி ஆகியன பங்கேற் கவில்லை.

அதேவேளை ரிசாத் பதியுதீன் விளக்கமறியலில் உள்ளதனால் அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படாத நிலையில் அவரின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பியான முஷாரவ். ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான இஷாக் ரஹ்மான். முஸ்லிம் கூட்டமைப்பு எம்.பி. யான அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாகவே வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்த்து வாக்களித்தபோதும் அவரின் கட்சி எம்.பி.க்கள் சபையில் இருக்கவில்லை.

இந்த வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரிசாத் பதியுதீன் விளக்க மறியலில் இருப்பதனால் பங்கேற்க அனுமதி வழங்கப்படாத நிலையில் மரணதண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர வாக் களிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டமையால் அரச தரப்புக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையில் சபையில் வாக்கெடுப்பு நேரம் கடும் தர்க்கமும் கூச்சல்களும் எழுந்தன. அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த சிவநேசத்துரை சந்திர காந்தனும் வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

கடந்த நவம்பர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையி சமப்பித்து உரையாற்றிய நிலையில் நவம்பர் 18 ஆம் திகதி முதல் 21 வரையான நான்கு நாட்கள் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையிலேயே இன்று சனிக்கிழமை 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை மீதான விவாதம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையிலான 16 நாட்கள் இடம்பெற்று டிசம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.