சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

181

புத்தளம், தப்போவ பகுதியில் இரண்டு சட்டவிரோத துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களுடன் இளைஞர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் தப்போவ மற்றும் பாவட்டமடு பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்ட புத்தளம் கருவலகஸ்வௌ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அப்பகுதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மூவர் மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்தும் இரண்டு துப்பாக்கிககள் உள்ளிட்ட உபகரணங்களுடன் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், மிருகங்களை வேட்டையாடுவதற்காக துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களுடன் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களை தமது பொறுப்பில் எடுத்த கருவலகஸ்வௌ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள், குறித்த மூவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.

அத்துடன், இம்மாதம் 26 ஆம் திகதி குறித்த மூவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.