இந்தியாவின் இரண்டாவது செல்வந்தரான அதானி மன்னாரிற்கு விஜயம்!

181

இந்தியாவின் இரண்டாவது செல்வந்தரான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று மாலை மன்னாரிற்கு விஜயம் செய்து, அவரது நிறுவனத்தால் முன்னெடுக்கும் திட்டத்தை பார்வையிட்டார்.

கௌதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும், இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்நிலையில், மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலையை பார்வையிட்டார். 20 நிமிடங்கள் மட்டுமே நின்ற அதானி தனது நிறுவனப் பணிகளை பார்வையிட்டு உடனடியாகவே கொழும்பு திரும்பினார்.

மேலும், துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.

அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.

இதனிடையே, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து அபிவிருத்தி செய்யும் கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலின் முதலாவது கான்கிரீட் பாலத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய களனி பாலத்திலிருந்து காலி முகத்திடல் வரை தூண்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வீதியில், முன்னரே பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலத்தின் 3,279 பகுதிகள் பொருத்தப்படவுள்ளன.

துறைமுக நுழைவாயிலின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தினால் துறைமுக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட கட்டடங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒதுக்கீட்டில் 17 மாடிகளைக் கொண்ட கடல்சார் வசதி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: