• Jul 21 2026

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் விநியோகம் துரிதம் – ஆளுநர் உத்தரவு

Chithra / Jul 21st 2026, 8:46 pm
image


மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 


அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் வெகுவிரைவில் ஏனைய மாவட்டங்களுக்கான மணல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.


வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்கவின் பங்குபற்றுதலுடன் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர் முன்னேற்றங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், மணல் விநியோக அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினார். 


பொதுமக்கள் குறைந்த விலையில், இலகுவாக மணலைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்காகவே புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவருடனான ஆரம்பக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த ஆளுநர், அதற்கான தொடர் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.


'சூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மாவட்டச் செயலாளர்கள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.


இதன்போது ஒவ்வொரு மாவட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன:


யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிதி மூலங்களினூடாக ஆயிரக்கணக்கான வீட்டுத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் நிர்மாணப் பணிகளுக்குப் பெருமளவிலான மணல் தேவைப்படுவதாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். 


எனவே, இந்தப் பெரிய தேவையைக் கருத்திற்கொண்டு தடையற்ற மணல் விநியோகத்தை உறுதிசெய்து அதனைச் சீராக ஒழுங்குபடுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.


மன்னாரில் மணல் விநியோகம் சீராக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. விலை நிர்ணயக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக மணலுக்கான விலையும், வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. 


அத்துடன், வெளி மாவட்டங்களுக்கு மணலைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுப்பதற்கான செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


மணல் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதேச சபையின் ஊடாக மணல் விநியோகத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


எனினும், பிரதேச சபையின் விண்ணப்பங்களில் காணப்பட்ட சில குறைபாடுகள் காரணமாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளமையால் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். 


மேலும், குளங்களில் மணலைக் கழுவி எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், நீர்மட்டம் குறையாமையால் அம்முயற்சி தாமதமாகியுள்ளதாகவும், இம்மாத இறுதியில் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விநியோகம் சீராக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் விநியோகத்திற்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தரப்பினரின் கள ஆய்வுக்குப் பின்னர் ஒரு வார காலத்தினுள் அதற்கான அனுமதிகள் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். 


வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மணல் விநியோகத்தில் பாரிய பிரச்சினைகள் ஏதுமில்லை என வவுனியா மேலதிக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.


விநியோக அனுமதிகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலொன்றை வழங்குமாறு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்துக்கு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார். 


அத்துடன், மணல் மற்றும் கிரவல் விநியோக ஒழுங்குபடுத்தல் கூட்டங்களை தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மாதத்துக்கு ஒருமுறையேனும் நடத்துமாறு மாவட்டச் செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். 


இச்செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்கள் போதிய அக்கறையின்றிச் செயற்பட்டால், ஏனைய பொது அமைப்புகளின் ஊடாக இதனை முன்னெடுப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறும் ஆளுநர் மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.


இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), நீர்ப்பாசனத் திணைக்களம், கட்டடங்கள் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றின் மாகாணப் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிநிதிகள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் விநியோகம் துரிதம் – ஆளுநர் உத்தரவு மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் வெகுவிரைவில் ஏனைய மாவட்டங்களுக்கான மணல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்கவின் பங்குபற்றுதலுடன் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர் முன்னேற்றங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், மணல் விநியோக அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினார். பொதுமக்கள் குறைந்த விலையில், இலகுவாக மணலைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்காகவே புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவருடனான ஆரம்பக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த ஆளுநர், அதற்கான தொடர் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.'சூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மாவட்டச் செயலாளர்கள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.இதன்போது ஒவ்வொரு மாவட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன:யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிதி மூலங்களினூடாக ஆயிரக்கணக்கான வீட்டுத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் நிர்மாணப் பணிகளுக்குப் பெருமளவிலான மணல் தேவைப்படுவதாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்தப் பெரிய தேவையைக் கருத்திற்கொண்டு தடையற்ற மணல் விநியோகத்தை உறுதிசெய்து அதனைச் சீராக ஒழுங்குபடுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.மன்னாரில் மணல் விநியோகம் சீராக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. விலை நிர்ணயக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக மணலுக்கான விலையும், வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெளி மாவட்டங்களுக்கு மணலைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுப்பதற்கான செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.மணல் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதேச சபையின் ஊடாக மணல் விநியோகத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், பிரதேச சபையின் விண்ணப்பங்களில் காணப்பட்ட சில குறைபாடுகள் காரணமாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளமையால் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். மேலும், குளங்களில் மணலைக் கழுவி எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், நீர்மட்டம் குறையாமையால் அம்முயற்சி தாமதமாகியுள்ளதாகவும், இம்மாத இறுதியில் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விநியோகம் சீராக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் விநியோகத்திற்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தரப்பினரின் கள ஆய்வுக்குப் பின்னர் ஒரு வார காலத்தினுள் அதற்கான அனுமதிகள் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மணல் விநியோகத்தில் பாரிய பிரச்சினைகள் ஏதுமில்லை என வவுனியா மேலதிக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.விநியோக அனுமதிகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலொன்றை வழங்குமாறு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்துக்கு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார். அத்துடன், மணல் மற்றும் கிரவல் விநியோக ஒழுங்குபடுத்தல் கூட்டங்களை தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மாதத்துக்கு ஒருமுறையேனும் நடத்துமாறு மாவட்டச் செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். இச்செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்கள் போதிய அக்கறையின்றிச் செயற்பட்டால், ஏனைய பொது அமைப்புகளின் ஊடாக இதனை முன்னெடுப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறும் ஆளுநர் மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), நீர்ப்பாசனத் திணைக்களம், கட்டடங்கள் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றின் மாகாணப் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிநிதிகள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement