மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களிலிருந்து முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த நிலைமைகள் குறித்தும் அதன்போது முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள்,எதிர்காலத்தில் அனத்தத்தினை முகம்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட உயர்மட்ட கூட்டம் இன்று(02) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரனின் ஒழுங்கமைப்பில், பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத்,தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நளீமி உட்பட திணைக்கள தலைவர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளப்பட்ட பாதிப்புகள், அதன்போது முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள், அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
விசேடமாக செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, தற்காலிகமாக குறித்த பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன், விவசாய பாதிப்பிற்கான நஸ்ட ஈடு வழங்குதல், போக்குவரத்து, கல்வி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெலுவதற்கு தேவையான ஏனைய விடையங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஶ்ரீகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மீன் பிடி, விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் காலங்களில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படின் அதற்கான முன்னாயத்த தயார்படுத்தல்களை எவ்வாறாக மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும் என இதன் போது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படக் காரணமாக திகழ்ந்து வரும் விடையங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது.