சூழலை பாதுகாப்பதற்கு சட்ட விரோத மண் அகழ்வு நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு பொலிஸ், சூழல் அதிகார சபை மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து செயலாற்ற வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (15) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன்போது, கருத்து தெரிவிக்கையிலே அருண் ஹேமச்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.
சூழலை பாதுகாப்பதற்கு சட்ட விரோத மண் அகழ்வு நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பொலிஸ், சூழல் அதிகார சபை மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து செயலாற்ற வேண்டும்.
சட்ட விரோதமாக ஒன்றும் இடம்பெற முடியாது. இது சட்டத்தின் ஆட்சி அரசாங்கத்தினுடைய கொள்கையும் அதுதான்.
சட்ட விரோதமாக மண் அகழ்வு இடம்பெறும் இடங்களை அடையாளம் கண்டு, அது தொடர்பாக பூரணமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும் பிரதி அமைச்சர் தெரிவிக்கையில், ஊழலை ஒழிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முன்னுரிமை அடிப்படையில் இருப்பது மட்டுமன்றி அரசியலை இலக்காக கொண்டு இடம் பெற கூடாது எனவும் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி நெறியாழ்கையின் கீழ், இக்கூட்டம் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் கேமச்சந்திர தலைமையில் இதற்கு தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறைபாடுகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
முக்கியமாக கரையோர பிரதேசங்களில், கண்டல் தாவரங்களை, பொதுமக்கள் வேலி போட்டு, காணிப்பிடிக்கின்ற பிரச்சினையும் கரையோரங்களில் அனுமதியின்றி, கட்டடங்களை அமைப்பது தொடர்பாகவும், இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் கிண்ணியா நகர சபை பிரிவு உட்பட்ட பகுதியில், சீரான மீன் சந்தை உண்டு இல்லாததை தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.
மேலும், குறிஞ்சாக்கேணி பாலம் அமைப்பதற்கு சகல பூர்வாங்க வேலைகளும் நிறைவு பெற்றுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கிண்ணியா நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
கிண்ணியா பிரதேச வைத்தியசாலைகளை தரம் உயர்த்துவது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூபினால் யோசனை முன்வைக்கப்பட்டது.
நாலு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற குறுஞ்சாக்கே கேணிபால அனர்த்தத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு இன்னும் கொடுக்கப்படாமை குறித்தும் இங்கு அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
குறிப்பாக மனித யானை மோதல், வீதி அபிவிருத்தி , இயற்கை அனர்த்தத்தின் போதான வடிகான் நிலவரம், சட்ட விரோத மண் அகழ்வு, வடிகான்கள், கல்வி சுகாதாரம் என பல முக்கிய தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின் குறித்த முதலாவது கூட்டம் இதுவாகும்.
குறித்த கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகருப், S. குகதாஸன். பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் துறைசார் அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.